PM Modi Austria Visit: இந்திய நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரத்தை, ஆஸ்திரிய இசைக்கலைஞர்கள் பிரதமர் மோடிக்கு இசைத்து வரவேற்பு அளித்தது, பிரதமர் மோடிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வந்தே மாதரம் பாடலை பாடிய ஆஸ்திரியாவினர்:

பிரதமர் மோடி, இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, இன்று ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றடைந்தார். அங்கு சென்ற பிரதமர் இராணுவ மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய நாட்டின் தேசிய பாடலை ரஷ்ய கலைஞர்கள் , பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தும், பல பாடகர்கள் ஒன்றாக இணைந்தும் பாடல்களை பாடினர். அப்போது, அந்த இசைக்கலைஞர்கள் முன்பு நின்று கொண்டே பிரதமர் மோடி ரசித்து கேட்டார். அவர்களது இசைக்கு கைதட்டியும் பாராட்டுகளையும் வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி.

Austria is known for its vibrant musical culture. I got a glimpse of it thanks to this amazing rendition of Vande Mataram! pic.twitter.com/XMjmQhA06R

— Narendra Modi (@narendramodi) July 10, 2024

மேலும், பிரதமர் மோடி தெரிவிக்கையில், ஆஸ்திரியா அதன் துடிப்பான இசை கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. வந்தே மாதரத்தின், அற்புதமான இசையமைப்புக்கு நன்றி என தெரிவித்து X தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாவது,

ஆஸ்திரியாவில் அன்பான வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் பிரதமர் நெஹாமருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, சிறப்பானது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது சிறப்பானதாகும். நமது இருதரப்பு உறவுகள் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தப் பயணம் நடைபெறுவது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வாகும்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகள் மீதான நமது நம்பிக்கை நமது உறவுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது. இன்று, பிரதமர் நெஹாமரும் நானும் மிகவும் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தினோம். நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளோம். நமது உறவுக்கு வரவிருக்கும் தசாப்தங்களில் ஒத்துழைப்புக்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

”வியன்னா காங்கிரஸ்”

நாம் நிற்கும் இந்த மண்டபம் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது. 19 ஆம் நூற்றாண்டில், வரலாற்று சிறப்புமிக்க வியன்னா காங்கிரஸ் இங்கு நடத்தப்பட்டது. அந்த மாநாடு ஐரோப்பாவில் அமைதி, நிலைத்தன்மைக்கு வழிகாட்டுதலை வழங்கியது. பிரதமர் நெஹமரும் நானும் உலகெங்கிலும் நடந்து வரும் மோதல்கள் குறித்து விரிவாக விவாதித்தோம், அது உக்ரைன் மோதலாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசிய நிலைமையாக இருந்தாலும் சரி. இது போருக்கான நேரம் அல்ல என்று நான் முன்பே கூறியுள்ளேன்.

போர்க்களத்தில் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எங்கிருந்தாலும் அப்பாவி உயிர்கள் பலியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை விரைவில் மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தை, ராஜ்ய நடவடிக்கைகளை இந்தியாவும் ஆஸ்திரியாவும் வலியுறுத்துகின்றன. இதை அடைவதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் இருவரும் தயாராக இருக்கிறோம்.

”தீவிரவாதத்தை கண்டிக்கிறோம்”

பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் போன்ற மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இன்று நாங்கள் எங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம். பருவநிலை தொடர்பாக, சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி, உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற நமது முன்முயற்சிகளில் இணையுமாறு ஆஸ்திரியாவை நாங்கள் அழைக்கிறோம்.

தீவிரவாதத்தை நாங்கள் இருவரும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஐக்கிய நாடுகள் சபை, இதர சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.

”இந்தியாவுக்கு வாருங்கள்”

வரவிருக்கும் மாதங்களில், ஆஸ்திரியாவில் தேர்தல் நடைபெறும். ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய மக்களின் சார்பில் பிரதமர் நெஹமருக்கும், ஆஸ்திரிய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்புக்காக பிரதமர் நெஹமருக்கு மீண்டும் ஒரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தியாவுக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கிறேன்.