விஐடி என்று அழைக்கப்படும் வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பி.டெக். படிப்பில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேலூரில் முதன்முதலாக 1984ஆம் ஆண்டு வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. இதற்கு 2001ஆம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் விஐடி சார்பில் இன்னொரு வளாகம் தொடங்கப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் அமராவதி, மத்தியப்பிரதேசத்தில் போபால் ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

22 வகையான படிப்புகள்

நிகர்நிலைப் பல்கலைக்கழகமான விஐடியில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் பி.டெக். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 22 வகையான படிப்புகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில், நுழைவுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களைப் பிடிப்பவர்களுக்கு, கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

விஐடிஇஇஇ- 2026

2026ஆம் ஆண்டுக்கான பொறியியல் இளநிலை பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு விஐடிஇஇஇ- 2026 (VITEEE 2026) என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வு ஏப்ரல் 28 முதல் மே 3 வரை உத்தேசமாக நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 31 கடைசித் தேதி ஆகும். மே 2ஆம் வாரத்தில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. தொடர்ந்து ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாங்கள் பெறும் தர வரிசை அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரிகளும் இடங்களும் ஒதுக்கப்படும். கட்டண சலுகைகளும் அளிக்கப்படும்.

1 லட்சம் வரை ரேங்க் பெறும் தேர்வர்களுக்கு வேலூர் மற்றும் சென்னை வளாகத்தில் இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://viteee.vit.ac.in/