தேர்தலில் முதன்முதலாக போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம். தான் போட்டியிடும் முக்கியத் தொகுதிகளை இறுதிச் செய்து வருகிறது. முதலில் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய தளகர்த்தகர்களாக உள்ளவர்களின் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா

கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா சென்னையில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கி செய்து வருகிறார். ஆனால், அதிமுகவில் இருந்து த.வெ.கவில் இணைந்துள்ள வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகரும் அந்த தொகுதியில் போட்டியிட முதலில் விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை ஆதவ் அர்ஜூனா சரிக்கட்டி, வேறு தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

திருச்செங்கோட்டில் அருண்ராஜ்

ஐ.ஆர்.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு, அதற்கான ஒப்புதலையும் விஜயுடம் பெற்று அந்த தொகுதியில் ஏற்கனவே கள பணிகளை தொடங்கியிருக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் சிடிஆர் நிர்மல்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் முதலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்த நிலையில், தற்போது விஜயின் அறிவுறுத்தலின்பேரில் அவர் திருப்பரங்குன்றம் தொகுதியை தேர்வு செய்திருக்கிறார். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தீபமேற்றும் விவகாரத்தில் பெரிய அளவில் பிரச்னைகள் வெடித்த நிலையிலும், பிரதமர் மோடியே திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நேரடியாக வந்து சாமி தரிசனம் செய்துள்ள சூழலிலும், இந்த தொகுதியில் நிர்மல்குமாரை போட்டியிட வைக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் கு.ப.கிருஷ்ணன்

அதிமுக முன்னாள் அமைச்சரும் முத்தரையர் சமூகத்தின் முக்கிய முகமாக இருப்பவருமான கு.ப.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் தற்போதைய திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் சமுகத்தை சேர்ந்தவரான கு.ப.கிருஷ்ணனை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட சொல்லி, விஜயே பர்சனலாக வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் மதியழகன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கரூர் மாவட்ட த.வெ.க செயலாளர் மதியழகனை செந்தில்பாலாஜிக்கு எதிராக கரூர் தொகுதியில் களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளார். கரூரில் 41 பேர் உயிரிழந்தாலும் அந்த சம்பவத்திற்கு தான் காரணமில்லை என்பதை நிரூபிக்கும்விதமாக கரூரில் தொகுதியில் மதியழகனை இறக்கி, வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தனது நிர்வாகிகளுக்கு விஜய் கட்டளையிட்டிருப்பதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோபியில் செங்கோட்டையன், தி.நகரில் புஸ்ஸி

அதே நேரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் த.வெ.கவின் முக்கிய நிர்வாகியுமான செங்கோட்டையன் அவரது சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்திலும், த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தி.நகரிலும் போட்டியிட முடிவு செய்திருக்கின்றனர்.

விஜய் போட்டியிடவிருக்கும் தொகுதி எது ?

கட்சியின் தலைவரான விஜயை பொறுத்தவரை முதல் தேர்தலிலேயே தனது வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாகயிருக்கும் நிலையில், அவர் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் பெரம்பூரில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வார்டு வாரியாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில், விஜய்க்கு ஆதரவான முடிவு வந்துள்ளதாலும் சென்னையிலேயே பெரம்பூர் தொகுதி இருப்பதால் அவர் சென்னையை விட்டு வேறு எங்கேயே செல்ல வேண்டிய தேவை இல்லாததாலும் இந்த பெரம்பூர் தொகுதியை அவர் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்க முயற்சித்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.