Velachery Parangimalai Train: வேளச்சேரி மற்றும் பரங்கி மலை இடையேயான வழித்தடத்தில் எத்தனை ரயில்கள் எந்தெந்த வழித்தடத்தில் இயங்கும் என கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பரங்கி மலை ரயில்சேவை - பிரச்னை ஓவர்

சென்னை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையேயான ரயில்சேவை, நாளை அதாவது மார்ச் 14ம் தேதி முதல் தொடங்குமென தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள இரண்டாவது கட்ட பிரிவை இயக்குவதற்காக ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையரிடமிருந்து (CCRS) தற்காலிக அங்கீகார சான்றிதழைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான புறநகர் ரயில் நீட்டிப்பில் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், கடந்த 10ம் தேதியே ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், மேற்குறிப்பிட்ட சான்றிதழ்க்கான ஆய்வின் போது சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) கட்டாய இடைவெளியில் ஷட்டரை அகற்றுவது அவசியம் என்று கண்டறியப்பட்டது. பாதுகாப்பு தரநிலைகளை முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணி நேரம் அவகாசம் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 14 முதல் பரங்கி மலை ரயில்சேவை..

இதையடுத்து, சென்னை கடற்கரை மற்றும் பரங்கி மலை இடையேயான ரயில் சேவைகள் மார்ச் 14, 2026 முதல் தொடங்க உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சேவையானது MRTS வழித்தடம் முழுவதும் நேரடி இணைப்பை செயல்படுத்தும், தினசரி பயணிகளுக்கு தடையற்ற புறநகர் ரயில் அனுபவத்தை வழங்கும். இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வருவதென்பது சென்னையின் புறநகர் ரயில் நெட்வர்க்கை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த வசதியானது சென்னை புறநகர் ரயில்வே மற்றும் சென்னை மெட்ரோ சேவைகளை இணைக்கும் முக்கிய பரிமாற்ற இடமான செயிண்ட் தாமஸ் மவுண்டில், பலதரப்பட்ட ஒருங்கிணைப்பையும் எளிதாக்கும்.

ரயில் சேவை விவரங்கள்:

இதற்காக சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே 2 ஜோடி சேவைகள், செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் வேளச்சேரி இடையே 3 ஜோடி சேவைகள் மற்றும் சென்னை கடற்கரை - செயிண்ட் தாமஸ் மவுண்ட் இடையே நேரடியாக 43 ஜோடி MRTS ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்ட இந்த வழித்தடமானது புதியதாக புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கத்தில் ரயில் நிலையங்களையும் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும், குறிப்பிட்ட வளைவுகளில் 15 கிலோ மீட்டர் வேகத்திலேயே பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடம்.. 20 ஆண்டு காத்திருப்பு

கடந்த 1997-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான உயர்நிலை பறக்கும் ரயில் திட்டத்தில், 100 ரயில் சேவைகளால் தினமும் சுமார் 1 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதனை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை என 4.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கும் பணிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட சிக்கலால் பணிகள் முடங்கின.

நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கின. இதையடுத்து குறிப்பிட்ட வழித்தடத்தில் 167 தூண்களுடன் பாதை அமைக்கும் பணிகள் முடிவுற்று மின்சார இணைப்பும் தரப்பட்டுள்ளது. தண்டவாள உறுதித் தன்மையை பரிசோதிக்க என்ஜின் வெள்ளோட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன் முடிவில், வரும் 14ம் தேதி முதல் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையேயான ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது. இதனால், சென்னை மக்களின் 20 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.