விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணியில் நிற்கவைத்து வைகோ படுகுழியில் தள்ளிவிட்டார் என திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்ற நிலையில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வென்றது. இந்த 4 இடங்களிலும் அக்கட்சியை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வற்புறுத்தியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ ஆகிய இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் வைகோவுக்கு மதிமுகவில் இருந்து விலகி திராவிட வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய மல்லை சத்யா பதிலளித்துள்ளார்.

நேர்காணலில் ஒன்றில் பேசிய அவர், “திமுக மீது குற்றச்சாட்டை முன்வைக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை நான் வைகோவிடம் முன்வைக்கிறேன். காரணம் 2016ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணியை நீங்கள் அமைத்தீர்கள். திமுக வந்துவிடக்கூடாது என்பதால், அதிமுகவுக்கு ஆதரவாக அந்த கூட்டணியை உருவாக்குனீர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதற்கு பலியாக்கி விட்டீர்கள். உங்களை முதலமைச்சராக்குகிறோம் என விஜயகாந்திடம் பொய்யான வாக்குறுதி, கணக்குகளை சொல்லி அவரை தோற்கடித்தீர்கள். இதனால் விஜயகாந்த் மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த தேர்தலில் 27 தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது.

அப்போது மதிமுகவுக்குள் இன்னொரு கூட்டணி உருவாகிறது. அதாவது பல்லாவரத்தில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை அவர்களின் விருப்பமான சின்னத்தில் போட்டியிட வைத்தீர்களா?.. மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் தான் களமிறக்கினார்கள். கொங்கு மண்டலத்தில் தாராபுரத்திலும் இன்னொரு கட்சி தலைவரை வேட்பாளராக நிறுத்தி பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிட வைத்தார். அப்படியாக தவறான ஒரு யுக்தியை முதல்முதலாக கையாண்டது மதிமுக தான்.

அன்றைக்கு நீங்கள் அந்த தவறை செய்து விட்டு இன்றைக்கு திமுகவை பழி சொல்கிறீர்கள். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை. நாங்களும் மறந்து விடவில்லை. நான் மக்கள் நலக்கூட்டணி உருவாவதற்கு முன்பே வைகோவை நேரடியாக எச்சரித்தேன். கம்யூனிஸ்ட் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தும்போதும் கூட மதிமுக தோற்றால் நிலைமை மோசமாகும் என வைகோ சொன்னார். முதலில் விசிக, மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் 234 தொகுதிகளையும் பிரித்துக் கொள்ளலாம் என்ற சூழல் வந்தபோது போட்டியிட வைக்க ஆட்கள் இல்லை. பணம் செலவு பண்ணவும் முடியாது.

Also Read: Minister Ramesh: வாட்ஸ்அப் மூலம் தரிசனம் முன்பதிவு.. கோயிலில் வரப்போகும் மாற்றம்.. அமைச்சர் அறிவிப்பு!

இதுதொடர்பாக காலையில் தொடங்கிய பேச்சுவார்த்தை மதியம் வரை தொடர்ந்தது. விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகியோரை கேட்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லக்கூடிய சூழல் இருந்தது. அப்போது வைகோவுக்கு ஒரு போன் வருகிறது. அதில் பேசியவர், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவியுங்கள் என சொல்கிறார். உடனே விஜயகாந்தை சந்தித்து வைகோ பேசினார். மனிதநேயமிக்க தலைவர் விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணியில் நிற்கவைத்து வைகோ படுகுழியில் தள்ளிவிட்டார்” என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.