உத்தரப்பிரதேச மாநிலத்தில் மோமோஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டில் இருந்த நகைகளை சிறுவன் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் ஒவ்வொரு வேளைக்கும் சுவையான விதவிதமான உணவு, சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். சாப்பிட்டே சொத்தை அழித்தவர்கள் என்ற பேச்சும் நம்மிடையே உண்டு. அந்த அளவுக்கு உணவு என்றால் அனைத்தையும் கொடுத்து விடும் அளவுக்கு வித்யாசமான வகைகள் மீது நமக்கு பிரியம் உள்ளது. அப்படி ஒரு சம்பவம் பற்றி நாம் இங்கு காணலாம்.

உத்தரப்பிரதேச மாநில தியோரியா நகரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு விம்லேஷ் மிஸ்ரா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வாரணாசியில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக உள்ளார். இவருடைய மகனுக்கு மோமோஸ் என்றால் கொள்ளை பிரியமாம். அதனால் அடிக்கடி விம்லேஷ் மகனுக்கு அந்த சிற்றுண்டியை வாங்கி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படியான நிலையில் சிறுவனின் மோமோஸ் உணவு பழக்கம் அவனுக்கே எதிராக மாறியது.

சிறுவன் வசிக்கும் பகுதியில் தான் அவனுக்கு விம்லேஷ் மிஸ்ரா மோமோஸ் வாங்கி கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அந்த கடைக்காரருடன் விம்லேஷ் மற்றும் அவரது மகனுக்கு நல்ல பழக்கம் இருந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அந்த கடையில் பணியாற்றிய 3 பேரும் நினைத்து திட்டம் தீட்டினர். அதன்படி சிறுவனுக்கு இலவசமாக மோமோஸ் வழங்கி கவர்ந்துள்ளனர். அவ்வப்போது கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து இன்னும் மோமோஸ் இலவசமாக வேண்டுமென்றால் வீட்டிலுள்ள நகைகளை எல்லாம் யாருக்கும் தெரியாமல் எடுத்து வர வேண்டும் என கூறியுள்ளனர். மோமோஸ் மீதான ஆசை சிறுவனை தான் என்ன செய்கிறோம் என்பதை உணர விடாமல் செய்துள்ளது.

அந்த சிறுவன் வீட்டில் இருந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அதனை கடைக்காரர்களிடம் கொடுத்து இலவசமாக மோமோஸ் சாப்பிட்டு மகிழ்ந்துள்ளான். இதனிடையே வீட்டில் வைத்த நகைகளை தேவைப்படுகிறது என விம்லேஷின் சகோதரி வந்து கேட்டுள்ளார். அப்போது அவரின் குடும்பத்தினர் அலமாரியை திறந்தபோது அங்கு நகைகள் இல்லாமல் இருந்துள்ளது. இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருடன் வந்து போனதற்கான அடையாளம் இல்லாததால் வீட்டில் இருப்பவர் யாரோ எடுத்திருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடத்தியதில் மோமோஸை இலவசமாக சாப்பிடுவதற்காக விற்பனையாளர்களிடம் நகைகளைக் கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதனையடுத்து விம்லேஷ் மிஸ்ரா 3 பேர் மீதும் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.