Upcoming Electric Bikes 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து விற்பனைக்கு வரவுள்ள, 5 புதிய மின்சார இருக்கர வாகனங்களில் ராயல் என்ஃபீல்ட் மாடலும் அடங்கும்.

மின்சார இருசக்கர வாகனங்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், மின்சார இருசக்கர வாகன சந்தையும் நடப்பாண்டில் பெரும் புரட்சியை எதிர்கொள்ள உள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் சுற்றுச் சூழல் மாசுபாடு தொடர்பாக பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்துவதற்கான நம்பிக்கையை உற்பத்தியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அதோடு, இருசக்கர வாகனம் என்பது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனமாகும். அந்த சந்தையில் பலன் பெறவும் பிரதான நிறுவனங்கள் விரும்புகின்றன. அதன் காரணமாக ஸ்போர்ட்டி தொடங்கி நகர பயன்பாட்டிற்கு ஏற்றது என பல புதிய மாடல்கள் நடப்பாண்டில் சந்தைப்படுத்தப்படுத்தப்பட உள்ளன.

1. ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்:

ரோட்ஸ்டர் எக்ஸ் மூலம் பிரபல மின்சார ஸ்கூட்டர் நிறுவனமான ஓலா மின்சார மோட்டார் சைக்கிள் சந்தையில் நுழைந்துள்ளது. இதன் எண்ட்ரி லெவல் வேரியண்டின் விலை ரூ.1 லட்சம் ஆகவும், X+ எனப்படும் பிரீமியம் வேரியண்ட்டின் விலை ரூ.2 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அட்டகாசமான தோற்றம், சக்தி வாய்ந்த பேட்டரி ஆப்ஷன்கள் மூலம் மிதமான ரேஞ்ச் ஆகியவற்றால், ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலானது செயல்திறன் மற்றும் அம்சங்களை விரும்பும் இளைஞர்களை குறிவைக்கிறது. இதில் 2.5 KWh , 3.5 KWh மற்றும் 4.5 KWh என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால்,140 முதல் 252 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

2. ராயல் என்ஃபீல்ட் எலெக்ட்ரிக் பைக்:

கிளாசிக் மற்றும் பிரபலமான இன்ஜின் பைக்குகளை தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனமானது, மிக விரைவிலேயே தனது முதல் மின்சார பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வழக்கமான ரெட்ரோ சார்மிங்குடன் நவீன எலெக்ட்ரிக் செயல்திறன் கொண்டு இந்த வாகனம் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேபிட் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும் என கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவகல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. நவின உலகிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கிளாசிக் பைக்கை ஓட்ட பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

3. ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக்

இந்தியாவின் மிகவும் நம்பகமான மோட்டார்சைக்கிள்களின் பெயர்களில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹோண்டா தனது முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் மிகவும் பிரபலமான ஆக்டிவாவின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 102 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். மிகவும் பிரபலம் மற்றும் சிறந்த சேவை அமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டால், ஆக்டிவா எலெக்ட்ரிக் வாகனமானது தினசரி பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமான வாகனமாக கருதப்படுகிறது. இதன் விலை ரூ.1.17 லட்சத்திலிருந்து ரூ.1.52 லட்சம் வரை நீள்கிறது.

4. அல்ட்ராவைலட் F99

அடித்து தூக்கி அதிவேகத்தில் செல்லும் வாகனம் தான் உங்கள் தேர்வு என்றால், அல்ட்ராவைலட் F99 உங்களுக்கான சரியான மின்சார இருசக்கர வாகனமாக இருக்கும். இதில் உள்ள வலுவான 90 KWh பேட்டரி மூலம் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3 விநாடிகளில் எட்டிவிடும். விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள இந்த வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.3 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

5.கொகோரோ கிராஸ் ஓவர்:

தைவானைச் சேர்ந்த கொகோரோ நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில், தனது கிராஸ் ஓவர் மாடல் மூலம் கால் பதிக்க உள்ளது. நகர பயன்பாட்டையும், லேசான ஆஃப் ரோட் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப்படுகிறது. இதில் இடம்பெறக்கூடிய 3.2 KWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 110 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிகிறது. ரூ.1.2 லட்சம் வரையில் மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டு, நகர பயன்பாட்டு மின்சார பைக்குகளுக்கு கடும் போட்டியளிக்கும் என கூறப்படுகிறது.