மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பின் (UDISE+) தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் முந்தைய ஆண்டை விட லேசாக அதிகரித்துள்ளது. அதேபோல், மொத்த ஆசிரியர்களில் பெண் ஆசிரியர்களின் பங்கு 54.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள்:

மாணவிகள் சேர்க்கை

இந்த அறிக்கையின்படி, தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து நிலைகளிலும் மாணவிகளின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இடைநின்ற மாணவிகளை மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்காகவும், பெண் கல்வியை ஊக்குவிக்கவும் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளே இந்த சேர்க்கை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

இதன்படி, 2025-26ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த மாணவிகள் சேர்க்கை 48.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2024- 25ஆம் ஆண்டில் 48.3 ஆக இருந்தது.

இது 2022-23ஆம் ஆண்டில் 48 சதவீதமும் 2023-24ஆம் ஆண்டில் 48.1 சதவீதமுமாக இருந்தது. ஆண்டுதோறும் அதிகரித்து, இந்த ஆண்டிலும் அதிகரித்துள்ளது.

2022- 23ஆம் ஆண்டில் 52.3 சதவீத ஆசிரியைகள் பணியில் இருந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் 53.3 சதவீதமாக அதிகரித்தனர். 2024-25ஆம் ஆண்டில் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை 54.2 சதவீதமாக அதிகரித்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் இந்த சதவீதம் 54.9 ஆக கணிசமாக அதிகரித்துள்ளது

ஆசிரியர்கள்

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பிக்கும் மொத்த ஆசிரியர்களில் தற்போது 54.9 சதவீதம் பேர் பெண்கள் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாடு

மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்க பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவிகளுக்கான தனி கழிப்பறை வசதிகள், பாதுகாப்பான குடிநீர், கை கழுவும் வசதிகள் மற்றும் மின்சாரம் ஆகியவை கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித் துறையில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதில் இந்த புள்ளிவிவரங்கள் நேர்மறையான மாற்றத்தை காட்டுகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தியக் கல்வி அமைப்பில் கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய இரு தளங்களிலும் பெண்களின் பங்கேற்பு சீரான வளர்ச்சியை நோக்கிச் செல்வதை இந்த UDISE தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.