மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 200 -க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களின் போது தாங்கள் இதுவரை இருந்த கட்சி உதவவில்லை எனவும், தமிழக வெற்றி கழகம் மட்டுமே உதவியதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இணைப்பு விழா

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தொண்டர் அணி தலைவர் தளபதி தினேஷ் தலைமையில் தவெகவில் இணையும் நிகழ்ச்சி சீர்காழியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. தொண்டரணி சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சிவா மற்றும் மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களை அக்கட்சியின் மாவட்ட தொண்டரணி சார்பில் அக்கட்சி துண்டை அணிவித்து வரவேற்றனர்.

கண்ணீருடன் இணைந்தவர்கள்

கட்சியில் இணைந்தவர்கள் பேசுகையில், "காவல் நிலையம் மற்றும் பல்வேறு பிரச்சனை தாங்கள் சந்தித்த போது, நாங்கள் இதுவரை இருந்து வந்த கட்சியின் மூலம் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆனால், உதவி கேட்காமலேயே தங்களுக்கு தேடிவந்து உதவியது தமிழக வெற்றி கழகத்தினர் தான். இவர்கள் விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். ஆகையால் தற்போது கட்சியாக செயல்பாடு தமிழக வெற்றி கழகத்தில் இணைவது என முடிவு செய்து தற்போது இணைந்துள்ளோம்" என கண்ணீருடன் சிலர் தெரிவித்தனர்.

உறுதிமொழி ஏற்ற தவெகவினர்

தொடர்ந்து கட்சியில் இணைந்தவர்கள் தமிழ்நாடில் 2026 -ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைய தாங்கள் பணியாற்ற போவதாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

2026 -ல் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தொண்டர் அணி தலைவர் தளபதி தினேஷ், கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசுகையில், "தமிழக வெற்றி கழகம் எப்போதும் மக்களின் நலனுக்காக பாடுபடும். மக்கள் பிரச்சனைகளின் போது அவர்களுக்கு உதவி செய்ய தயங்காது. கட்சியில் இணைந்தவர்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்றும், 2026 ஆம் ஆண்டு தவெக ஆட்சியர் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கிய பிறகு தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் அரசியல் ஈடுபாடு காட்டி வருகின்றனர். அதேபோன்று தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அக்கட்சிக்கு ஆதரவு பெருகி வருவதாகவும், மாற்றுக் கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது, மற்ற கட்சிகளுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சிக்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இதுபோன்ற இணைவு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெருமானால், தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து வளர்ந்து 2026 தேர்தலில் அக்கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.