தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி தரக்கோரி பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய அஜிதா ஆக்னஸ் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்த 2024, பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் விஜய் மாவட்டங்கள் தோறும் மாவட்ட செயலாளர் தொடங்கி, பல்வேறு துறைகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு கேட்டு தர்ணா

இப்படியான நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான அஜிதா ஆக்னஸ் தான் மாவட்ட செயலாளர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கான பொறுப்புகளில் வேறு நபர்களை விஜய் அறிவித்தார். அவர்களை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து பொறுப்புகளுக்கான ஆணைகளை விஜய் வழங்கினார்.

கடந்த டிசம்பர் 23ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில் அன்று தனது ஆதரவாளர்களுடன் அஜிதா ஆக்னஸ் பனையூருக்கு வந்தார். அங்கு தனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என கூறி கட்சி அலுவலகத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய் காரை மறித்து போராட்டம் நடத்தினார். ஆனால் அவரை பாதுகாவலர்கள் விலக்கி விட்டனர். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு அஜிதா ஆக்னஸ் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விஜய் நேரில் வந்து பேச வேண்டும். அதுவரை இங்கிருந்து நகர மாட்டோம் என முழக்கமிட்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாங்கள் விஜய் மக்கள் இயக்கம் உருவான காலக்கட்டத்தில் இருந்தே உழைத்து வருவதாக அஜிதா ஆக்னஸ் தெரிவித்தார். ஆனால் கடைசி வரை அவர்கள் யாரும் விஜய்யை சந்திக்கவில்லை.

இதனிடையே தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் அஜிதா ஆக்னஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டார். மேலும் அஜிதாவுக்கு மாவட்ட அளவில் இல்லாமல் மாநில அளவில் பதவி வழங்கப்படும் என நிர்மல் குமார் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது போராட்டத்தை கைவிட்ட அஜிதா ஆக்னஸ், “தலைமை மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், கடைசி வரை விஜய்யுடன் இணைந்து பயணிப்போம்” எனவும் கூறினார். இதனால் இப்பிரச்னை முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டது.

தற்கொலை முயற்சி

இதற்கிடையில் அஜிதா ஆக்னஸை சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்கள் சிலர் திமுகவின் கைகூலிகள் என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.