TVK Vijay: வாக்களிக்க பணம் பெற வேண்டாம் என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

நீட் மட்டும் தான் உலகமா? - விஜய்

பொதுத்தேர்வில் சாதித்த 16 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் நடைபெறுகிறது. முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், ”படிப்புல சாதிக்கணும் தான்.படிப்பும் சாதனை தான். ஆனா ஒரே ஒரு படிப்பில் தான் நாம் சாதிக்க வேண்டும் என நினைப்பது சாதனை கிடையாது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் யோசித்து மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். அவ்வளவு மன அழுத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை கிடையாது. நீட் மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெருசு. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றன. இதனால் உங்கள் மனதை இப்போதே திடமாக வைத்திருக்க பழகுங்கள். ஜனநாயகத்துடன் செயல்பட பழகுங்கள் அப்படி இருந்தால் சுதந்திரமாக செயல்பட முடியும். முறையான ஜான்நாயகம் இருந்தால் தான் எல்லாருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்கும்.

ஜனநாயக கடைமையை செய்யுங்கள் - விஜய்

அதற்கான முதல்படி, உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் அவர்களது ஜனநாயக கடைமையை முறைப்படி செய்ய வலியுறுத்துங்கள். அது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யார் என பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அதுதான் அந்த கடைமை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாணவர்கள் நிகழ்ச்சியில் பேசியபோது, பணம் கொடுத்து ஜெயித்துவிடலாம் என நினைப்பவர்களை ஊக்கிவிக்கக் கூடாது. யாரும் வாக்கிற்கு பணம் வாங்க கூடாது என வீட்டில் இருப்பவர்களிடம் கூறுங்கள் என சொல்லியிருந்தேன். அதை அப்படியே பின் தொடருங்கள்.

”பணத்தை கொட்டுவார்கள்”

ஆனா, நீங்க வேணா பாருங்க அடுத்தவருடம் வண்டி வண்டியா கொண்டு வந்து கொட்ட போறாங்க. அதை அத்தனையும் உங்களிடமிருந்து கொள்ளையடிச்ச பணம் தான். என்ன செய்ய போறிங்க. என்ன செய்யனும்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அதை நான் சொல்லி தெரியணும்னு இல்ல. பெற்றோர்களே உங்களது பிள்ளைகளின் விவகாரங்களில் எந்தவொரு விஷயத்தை திணிக்காதீர்கள். அவர்களுக்கு என்னபிடித்து இருக்கு என்பதை அறிந்து ஊக்குவியுங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அவரவர் அது விருப்பமான துறைகளில் மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.

”சாதி, மதம் வேண்டாம்”

மற்றொரு முக்கியமான விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்னவென்றால் சாதி மற்றும் மதத்தை கொண்டு பிரிவினையை வளர்க்கிறவர்கள் பக்கமே போயிடாதிங்க. அந்த சிந்தனை உங்களை தொந்தரவு செய்ய அனுமதிக்காதீர்கள். விவசாயிகள் என்ன சாதி மதம் மொழி பார்த்தா பொருட்களை விளைவிக்கிறார்கள்? தொழிலாளர்கள் என்ன சாதி மதம் பார்த்த பொருட்களை உற்பத்தி பண்றாங்க? அவ்ளொ ஏன்? இயற்கை அம்சங்களானா வெயில், மழையில் சாதி, மதம் இருக்கா? போதைபொருட்களை போன்றே சாதி மற்றும் மதங்களை முடிந்தவரையில் மிக தூரமாக வைக்க வேண்டும். அதுதான் எல்லாருக்குமே நல்லது. காரணம், அண்மைக்காலத்தில் தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச விரும்புகின்றனர். யுபிஎஸ்சி தேர்வில் கூட சாதி சாயம் பூசுவதை போன்று ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உலகத்தில் எது சரி, எது தவறு என ஆராய்ந்தாலே போதும் தெளிவான ஒரு வாழ்க்கையை வாழலாம்.

எதற்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படாதீர்கள், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ரீதியாக அணுகுங்கள். இன்றைய நவீன உலகை அணுகவே இதுவே சரியான வழியாகும்.” என விஜய் பேசினார்.