தவெக-வின் முக்கிய தலைவரும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் இன்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

வரலாறு படைக்கும் நிகழ்ச்சி:

இது தமிழ்நாடு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. தேவையில்லாமல் விமர்சனம் செய்கிறார்களே தவிர, அவர்களைப் பற்றி நாங்கள் பேசினால் நீங்களும் கேட்க இருப்பீர்கள். ஆனால், பேசுவது இல்லை.

எங்கள் லட்சியமே வேறு. வெற்றி என்ற இலக்கை எட்டுவதற்குத்தான் நாங்கள் பயணம் மேற்கொள்கிறோம் தவிர, டெபாசிட் இழப்பதற்கு அல்ல. பொதுவாக அவரது(விஜய்) சுற்றுப்பயணம் ஈரோட்டிற்குப் பிறகு, இனி பங்கேற்கும் நிகழ்ச்சியானது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். அவர் வரலாற்றுக்குச் சொந்தக்காரர் என்பதை இந்த நேரத்தில் சொல்கிறேன்.

நிரந்தர முதலமைச்சர்:

தமிழகத்தை ஆளப்போகும் தலைவனை, வெற்றிக் கழகத்தை யாராலும் வீழ்த்த முடியாது. நாளையே தேர்தல் நடந்தாலும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய்தான். எங்களிடம் நியாயம் இருக்கிறது. நேர்மை இருக்கிறது. தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பை இந்த தலைவன் ஏற்கும் வரை ஓயமாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சூடுபிடிக்கும் அரசியல் களம்:

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் களத்தில் குதித்திருக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம்.

அக்கட்சியில் கூட்டணி வைக்க இதுவரை எந்த கட்சியும் முன்வராத நிலையில், அக்கட்சிக்கு பலம் அளிக்கும் வகையில் சேர்ந்திருப்பவர் செங்கோட்டையன். 2026ம் ஆண்டு பிறந்த பிறகு தவெக-வின் அரசியல் பணிகள் இன்னும் வேகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யும், தவெக-வும் முடங்கிய சூழலில் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு தங்கள் அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கினர். விஜய்யுடன் இருப்பவர்களுக்கு போதியளவு அரசியல் அனுபவம் இல்லாத நிலையில், செங்கோட்டையனின் வருகை அவர்களுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

செங்கோட்டையன் விஜய்யின் சுற்றுப்பயணம், மக்கள் சந்திப்பு, பரப்புரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை கையாண்டு வருகிறார். மேலும், திமுக ஆட்சியைத் தக்க வைக்கவும், அதிமுக ஆட்சியைப் பிடிக்கவும் தேர்தல் வாக்குறுதிகளை தயார் செய்து வரும் நிலையில், இவர்கள் இருவருக்கும் போட்டியாக தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியில் தவெக ஈடுபட்டு வருகிறது.

வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, முக்கிய அரசியல் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தவெக-வின் பணிகள் செங்கோட்டையன் தலைமையில் நடந்து வருகிறது.