தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியான திமுக தங்களது 5 ஆண்டுகால ஆட்சி திட்டங்கள், கூட்டணியை வலுப்படுத்துவது எனவும், அதிமுக ஏற்கனவே பா.ஜ.க.வுடன் கூட்டணியை அமைத்தும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

தவெக-வுக்கு முதல் தேர்தல்:

தமிழக சட்டமன்ற தேர்தல் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சூடுபிடித்திருப்பதற்கு காரணம் நடிகர் விஜய் ஆவார். அறிமுக அரசியல்வாதியாக வரும் தேர்தலில் அவருடைய தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது. கடந்தாண்டு பிப்ரவரியில் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், கடந்தாண்டு பிற்பாதியில் இருந்துதான் அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

நடப்பாண்டு முதல் தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், பூத் கமிட்டியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மக்களை தவெக பக்கம் இழுக்கும் முயற்சியாக விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

விரைவில் சுற்றுப்பயணம்?

விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கும் சூழலில், அவர் எப்போது இந்த பயணத்தை தொடங்குவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று பேசிய ஆதவ் அர்ஜுனா விஜய் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தனது சுற்றுப்பயணத்தால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துவார் என்று கூறினார்.

பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு:

விஜய்யின் பிறந்த நாள் அடுத்த மாதம் வர உள்ள நிலையில், அவருடைய பிறந்தநாள் பரிசாக அவரின் ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது. அதனுடன் அவருடைய சுற்றுப்பயண அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது அவர் சுற்றுப்பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவார் என்றோ கருதப்படுகிறது.

விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விஜய் சுற்றுப்பயணம் வருவதற்குள் பூத் கமிட்டியை வலுப்படுத்துவதுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையையும் அதிகரிக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடப்பதால் ஆளுங்கட்சியான திமுக தங்களது ஆட்சியைத் தக்க வைக்க பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அடுத்தடுத்த நாட்களில் வெளியிடுவதற்கு பிரதான வாய்ப்புகள் உள்ளது.

கூட்டணியில் யார்?

அதேசமயம் தமிழக வெற்றிக் கழகத்தினருடன் இதுவரை எந்த பெரிய கட்சியும் கைகோர்க்கவில்லை. இதனால், ஒருபுறம் முக்கிய அரசியல் கட்சிகளை தங்கள் பக்கம் கூட்டணிக்கு கொண்டு வரவும் விஜய் தீவிரமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அக்டோபரில் விஜய் மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.