2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை குழு தலைவர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்து நின்று சட்டமன்ற தேர்தலை சந்தித்து வந்தது. ஆனால் இந்த முறை புதிதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுவது பெரும் ஆர்வத்தை மட்டுமல்லாமல் சிக்கலையும் உண்டாக்கியுள்ளது.

வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக தவெக

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார். 33 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இப்படியான நிலையில் விஜய் திரைத்துறையை விட்டு அரசியலுக்கு வந்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 18 முதல் 30 வயதுகுட்பட்ட இளம் வாக்காளர்கள் ஆதரவு விஜய்க்கு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கப்பட்டிருப்பது பிரதான அரசியல் கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜயை இணைக்க திட்டமிட்ட பாஜக

இந்த நிலையில் விஜய் திமுகவை அரசியல் ரீதியாக எதிரி, பாஜகவை கொள்கை ரீதியாக எதிரி எனவும் விமர்சனம் செய்து வந்தார். மேடைக்கு மேடை திமுகவை சரமாரியாக விமர்சித்தார். இந்த தேர்தல் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், விஜயை தங்கள் பக்கம் இழுத்தால் நிச்சயம் திமுகவை எளிதாக வெல்ல முடியும் என பாஜக மேலிடம் கணக்கு போட்டதாக சொல்லப்பட்டது.

இதுதொடர்பாக விஜயிடம் பேச்சுவார்த்தை கூட நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பேச்சுவார்த்தை நடந்தது உண்மை என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இதனால் விஜய் என்ன மாதிரியான முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

234 தொகுதிகளிலும் தனித்து தான் போட்டி

இப்படியான நிலையில் சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “இன்றைக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். இஸ்லாமிய தோழர்களும்,கிறிஸ்தவ தோழர்களும் நோன்பு இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தமிழக மக்களே நான் உறுதியாக சொல்கிறேன். 234 தொகுதிகளிலும் தனியாக தான் களமாடுகிறோம். இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு உண்மையாக தான் இருக்கிறோம். விஜய்க்கு நிறைய சலுகைகள் கொடுத்ததெல்லாம் உண்மை தான் எனவும் கூறியுள்ளார். இதன்மூலம் விஜயை சுற்றியிருந்த சர்ச்சைகளுக்கும், கேள்விகளுக்கும் முடிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.