ஐபிஎல் படத்தில் எனக்கு டான்ஸ் ஆடுவதில் தான் மிகப்பெரிய அளவில் சவால் இருந்ததாக நடிகர் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் நடிகர் கிஷோர், நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ஐபிஎல் (இந்திய பீனல் கோட்). ஜி.ஆர். மதன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் பைக் ரேஸர் டிடிஎஃப் வாசன் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய டிடிஎஃப் வாசன் படம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது, “ஐபிஎல் படத்தில் நான் நடித்தது ரொம்ப சந்தோஷமா இருக்குது. நடிகர் கிஷோரின் கதை தேர்வுகள் பற்றி நமக்கு தெரியும். அப்போதே 50 சதவிகிதம் எனக்கு உடன்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு இயக்குநர் கருணாநிதி, வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என தெரிந்தது. கதை கேட்டதும், தொடர்ந்து படத்தில் நடித்த பிரபலங்கள் என எல்லாம் தெரிந்த பிறகு ஷூட்டிங் சென்றோம். நவம்பர் 28ம் தேதி படம் வெளியாகவுள்ளது.

படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு ரேஸிங் ஸ்டார் என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தயாரிப்பாளர் தான் போட வேண்டும் என கூறினார். அவரின் முதல் படம் இதெல்லாம் தேவையா என கூட இயக்குநர் கருணாநிதி கேட்டார். ஏன் இந்த அளவு தயாரிப்பாளருக்கு பிரியம் என்பது புரியவில்லை. நான் நடிப்பு பயிற்சி எடுத்ததால் கேமரா பயம் இல்லை. மஞ்சள் வீரன் படம் உருவானபோதே நான் என்னுடைய முழு அர்ப்பணிப்பை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.

என்னுடைய குடும்பத்தினருடன் முதல் மற்றும் கடைசியாக போன படம் “தோரணை” . கிராமத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் தியேட்டர் இருப்பதால் செல்ல முடிவதில்லை. என்னுடைய படத்துக்கு தான் நான் குடும்பத்துடன் செல்லவுள்ளேன். எனக்கு ஐபிஎல் படத்தில் டான்ஸ் ஆடுவது தான் ரொம்ப சவாலாக இருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் ரொம்ப கூச்சப்பட்டேன்.

என்னுடைய முதல் படமான மஞ்சள் வீரனில் ஒருநாள் ஷூட் நடைபெறவில்லை. அதன் பின்னால் இந்த ஐபிஎல் படம் வந்தது. அப்போதும் கூட மஞ்சள் வீரன் ஷூட்டிங் நடக்கும் என நினைத்தேன். ஆனால் கைவிடப்பட்டதாக கூறினார்கள். அந்த படத்தை விட்டு வேறு படம் செய்ய மனமும் இல்லை. கிட்டதட்ட இரண்டரை வருடங்கள் காத்திருந்தேன். ஐபிஎல் படத்தில் நடிக்கும்போது இதுதான் நம் முதல் படம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அடுத்த படத்தின் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இரண்டு படங்கள் இயக்கிய முக்கிய இயக்குநரின் படத்தில் நடிக்கப் போகிறேன். ரேஸிங் ஸ்டார் என போடும்போது மிகப்பெரிய அளவில் விமர்சனம் வந்தது. ஆனால் அப்படிப்பட்ட கருத்துகள் வளர்ச்சிக்கானது என எடுத்துக் கொள்கிறேன். தவறு என்றால் சரி செய்வேன்.

மேலும் படத்தில் பைக் காட்சிகளில் நடித்ததும் நடிகர் அஜித்துடன் ஒப்பிடுகிறார்கள். நம் அனைவருக்கும் சிறு வயதில் இருந்தே பைக் மீது ஒரு பிடிப்பு இருக்கிறது. அதை திரையில் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் அஜித்துடன் ஒப்பிடும் அளவுக்கெல்லாம் இது இல்லை. இருந்தாலும் நான் கார் பந்தயத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். fmsci லைசென்ஸ்காக காத்து கொண்டிருக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் நாளில் எனக்கு பாஸ்போர்ட் வந்து விடும். மலேசியாவில் பயிற்சி மேற்கொண்டு 2028 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் பந்தயத்திற்கு செல்லப்போகிறேன்” என டிடிஎஃப் வாசன் கூறியுள்ளார்.