இஸ்ரேல் - ஹமாஸ் போர், உக்ரைன் - ரஷ்யா போர் என உலக நாடுகள் கவலையை ஆழ்த்தியுள்ள நிலையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் உலக நாடுகளை மேலும் கவலைக்குள்ளாக்கியது.

நாட்டாமைத்தனம் காட்டிய அமெரிக்கா:

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்திய நிலையில், பாகிஸ்தான் இந்தியாவிற்கு பதிலடி தரும் நோக்கத்தில் ஆபரேஷன் பன்யன் உம் மசூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. ஆனால், பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்தது.

இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றே பலரும் விரும்பிய நிலையில் திடீரென அமெரிக்க அதிபர் போர் முடிவுக்கு வருவதாக அறிவித்த சில நிமிடங்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. தாக்குதல் முடிவுக்கு வருவது இரு நாட்டு மக்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தினாலும், இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு செய்தததற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மிரட்டிய டிரம்ப்:

இந்திராகாந்தி போல பிரதமர் மோடி செயல்படவில்லை என்று பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அமெரிக்காவின் தலையீடு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்காத நிலையில், திடீரென இன்று அமெரிக்க அதிபர் இந்தியா - பாகிஸ்தான் தொடர்ந்து சண்டையிட்டால் வர்த்தகம் செய்யமாட்டோம் என்று கூறினோம்.

அதன் காரணமாகவே இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக் கொண்டன என்று அறிவித்தார். இந்தியாவையும், பாகிஸ்தானையும் வர்த்தகத்தை காட்டி மிரட்டி அடிபணிய வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறைமுகமாக கூறியிருப்பது பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

விளக்கம் தராத மோடி:

இந்த சூழலில், நாட்டு மக்களுக்கு சற்று நேரத்திற்கு முன்பு உரையாற்றிய பிரதமர் மோடி பாகிஸ்தான் கெஞ்சியது என்றும், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் பேசியுள்ளார். பிரதமர் மோடி தற்போது பாகிஸ்தான் கெஞ்சியது, போர் நிறுத்தம் தற்காலிகமானது என்று கூறினாலும் அமெரிக்க தலையீடு, டிரம்ப் பேசியது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அணு ஆயுத மோதலை நிறுத்தியதாகவும், வர்த்தகத்தை காட்டி போரை நிறுத்தியதாகவும் டிரம்ப் மார்தட்டிக் கொள்வது பா.ஜ.க.விற்கும், மத்திய அரசுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அரசுக்கு சறுக்கல்:

அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு இந்தியர்களை சங்கிலியில் கட்டி இந்தியாவிற்கு அனுப்பிய விவகாரத்திலே மோடிக்கு கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் குவிந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விவகாரத்தில் அமெரிக்கா தலையீடுவது மோடியின் செல்வாக்கிற்கும், மோடி அரசின் செல்வாக்கிற்கும் பெரும் சறுக்கலை உண்டாக்கியுள்ளது.