பொதுவாக, வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பதற்காக, Free ஆஃபர்களை கொடுப்பார்கள். இந்நிலையில், ஏற்கனவே வியாபாரி என்று விமர்சிக்கப்படும் ட்ரம்ப், அதற்கு ஏற்றார்போல் கனடாவிற்கு ஒரு ஆஃபரை கொடுத்துள்ளார். அதாவது, அமெரிக்காவுடன் 51-வது மாகாணமாக இணைந்தால் அந்த ஆஃபரை பெறலாம். அது என்ன தெரியுமா.? பார்க்கலாம் வாருங்கள்...

ட்ரம்ப்பின் கனவுத் திட்டமான ‘கோல்டன் டோம்‘

அமெரிக்காவிற்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கப் போவதாக சமீபத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அந்த திட்டம் தான் ‘கோல்டன் டோம்‘.

இந்த திட்டம், விண்ணில் ஒரு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்தும் திட்டமாகும். இத்திட்டத்தை, 175 பில்லியன் டாலர்கள் மதிப்பில் செயல்படுத்தப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு வேளை போர் சூழல் ஏற்பட்டால், சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளிலிருந்து வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வகையில், அதிநவீன சென்சார்கள் மற்றும் இடைமறிப்பான்களுடன், விண்ணில் சுற்றிவரும் ஏராளமான செயற்கைக்கோள்களின் வலையமைப்பை பயன்படுத்துவதே இந்த ‘கோல்டன் டோம்‘ திட்டம்.

இஸ்ரேலின் பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் பெயர் ‘அயர்ன் டோம்‘. இஸ்ரேல் இந்த அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்காவின் ஆதரவுடனேயே உருவாக்கியது. இந்த அயர்ன் டோம் அமைப்பால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த சாயலிலேயே ‘கோல்டன் டோம்‘ என பெயரிட்டு இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த ‘கோல்டன் டோம்‘ வான் பாதுகாப்பு கேடய அமைப்பு, பாலிஸ்டிக், ஹைப்பர்சோனிக், க்ரூஸ் உள்ளிட்ட அனைத்து விதமான ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கு வல்லமையுடன் உருவாக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் மூலம், மேற்கு ஆசிய சுற்றுப்புறங்களிலிருந்து வரும் வான் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று ட்ரம்ப் நம்புகிறார்.

‘கோல்டன் டோம்‘ - வட கொரியா, சீனா, ரஷ்யா எதிர்ப்பு

ட்ரம்ப்பின் இந்த திட்டத்திற்கு வட கொரியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ‘கோல்டன் டோம்‘ முயற்சி விண்வெளியை அணு ஆயுதப் போர் களமாக மாற்றும் சாத்தியங்கள் உள்ளது என வட கொரியா கூறியுள்ளது. மேலும், விண்வெளியை ராணுவமயமாக்க அமெரிக்கா எதுவும் செய்யத் தயாராக இருப்பதாகவும் வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, உலகளாவிய அணு ஆயுத மற்றும் விண்வெளி ஆயுதப் போட்டியை இந்த திட்டம் தூண்டக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

இதேபோல், இந்த திட்டம் குறித்து கவலை கொள்வதாகவும், இத்திட்டம், விண்வெளியை ஒரு போர்க்களமாக மாற்றும் ஆபத்துகளை அதிகரித்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் சமரசம் செய்யக் கூடாது எனவும், இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.

கோல்டன் டோம் திட்டத்தின் பல விவரங்கள் மற்றும் நுணுக்கங்கள் தெளிவாக இல்லை என்றும், இத்திட்டம் குறித்து கவலை கொண்டுள்ளதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.

கனடாவிற்கு ஆஃபர் கொடுத்த ட்ரம்ப்

இப்படி, பல நாடுகளின் எதிர்ப்பை ‘கோல்டன் டோம்‘ சம்பாதித்து வரும் நிலையில், கனடாவிற்கு ஒரு ஆஃபரை கொடுத்துள்ளார் ட்ரம்ப். ஏற்கனவே கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்றுவேன் என ட்ரம்ப் கூறியுள்ளது தெரிந்த விஷயம்தான். ஆனால், அதற்கு கனடா கடும் எதிர்ப்பும் தெரிவித்தது.

இந்நிலையில், ‘கோல்டன் டோம்‘ திட்டத்தில் அமெரிக்காவுடன் இணைய கனடா ஆர்வம் காட்டியுள்ளது. அது குறித்த கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா மாறினால், கோல்டன் டோம் திட்டத்தில் இலவசமாகவே இணைந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அப்படி இல்லாவிட்டால், இத்திட்டத்தில் இணைவதற்கு, கனடா 61 பில்லியன் டாலர்களை செலவு செய்ய வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு கனடா இன்னும் எதிர்வினையாற்றவில்லை. அந்நாடு என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

3