அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல், இதுவரை அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கை தொடரும் எனவும் கூறப்படுகிறது.

பொறுப்பேற்றது முதல் பொறி கிளப்பும் டொனால்ட் ட்ரம்ப்

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். அதில் முக்கியமானது, சட்டவிரோதமாக மெரிக்காவில் குடியேறி வசிப்பவர்களை வேட்டையாடி, அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது. அந்த வகையில், சமீபத்தில், இந்தியாவைச் சேர்ந்த 205 பேர் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

டார்கெட் செட் செய்து கைது நடவடிக்கை

இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இதுவரை சட்டவிரோதமாக அங்கு குடியேறிய 8 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, இந்த அதிரடி கைது நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அமைப்பு, தினசரி சுமார் 1,400 பேர் என்ற அடிப்படையில், டார்கெட் செட் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதை, அந்த அமைப்பின் இயக்குநர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க எல்லை வழியாக, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் வந்து குடியேறுகின்றனர். அப்படி வருவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அதிபர் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதனால், வரும் நாட்களில் கொத்து கொத்தாக கைது நடவடிக்கை தொடரும் என்று கூறப்படுகிறது.