முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

"தமிழ்நாட்டுக்கு என்று ஒரு அறிவுமுகம் உள்ளது, ஒரு IAS, IPS அதிகாரி தமிழ்நாட்டு காடர்-ஆக இருந்தால், அவர்களுக்கு மதிப்பே தனி. அதுவும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இன்னும் மதிப்பு கூடும்! கடந்த சில ஆண்டுகளாக UPSC தேர்வுகளில் நம்ம இளைஞர்கள் தேர்ச்சி பெறுவது குறைந்துவிட்டது. ஆனால், இப்போது அந்த கவலையை நீங்கள் போக்கிவிட்டீர்கள்!" - UPSC தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்வேகப் பேச்சு

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை

உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணை |இன்றி நேரடியாக சிறைத் தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி! மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது சுற்றுச் சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது, அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் பெறப்படுவதாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு

தவெக பூத் கமிட்டி மாநாடு

கோவை குரும்பபாளையத்தில் இன்று நடக்க உள்ள தவெகவின் முதல் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார் அக்கட்சித் தலைவர் விஜய். முதல் நாளான இன்று ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும், நாளை கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர்.

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட சோக நிகழ்வு!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் கோயில் திருவிழாவை ஒட்டி பைக்கில் எடுத்து வரப்பட்ட பட்டாசு வெடித்து சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு பைக்கில் வைத்து நாட்டு வெடியை கொண்டு சென்றபோது சாலையில் வெடித்த பட்டாசுகளில் இருந்து தீப்பொறி பட்டத்தில் நாட்டு வெடி சிதறியதாக போலீசார் விசாரணையில் தகவல். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

ரஜினி ஆவேசம்

”பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை தாக்குதலை செய்தவர்களுக்கும், அதற்கு பின்னனியில் உள்ளவர்களுக்கும் விரைவில் கடினமான தண்டனை தர வேண்டும்"- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடும் கண்டனம்

இந்தியா திட்டவட்டம்

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் எடுக்க திட்டம் - மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உறுதி!

போப்பிற்கு இன்று இறுதிச்சடங்கு

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஃப்ரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் சடங்குகள் சுமார் நான்கு மணி நேரம் நீளும் என கூறப்படுகிறது. அதன் முடிவில் வாட்டிகனுக்கு வெளியே ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார். ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அங்கு அடக்கம் செய்யப்படும் முதல் போப் ஃப்ரான்சிஸ் ஆவார்.

அமெரிக்காவில் தொடரும் காட்டுத்தீ!

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் சுமார் 13,000 ஏக்கர் அளவிற்கு காட்டுத் பரவியுள்ளதால் மாகாண அளவிலான அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 5,000 மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புகைமூட்டம் காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணி, இரவு பகலாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 50% தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தீயணைப்புத் துறையினர் தகவல்.

ஐபிஎல் இன்றை போட்டி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 5வது இடத்திலும் கொல்கத்தா அணி 7வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேறிய சிஎஸ்கே?

ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது. இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்தாலும், மீதமுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் குறைவே.