TNPSC GRP-4: க்ரூப் 4 தேர்வின் மூலம் கூடுதலாக 727 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

க்ரூப் - 4 தேர்வு - கூடுதல் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 935 க்ரூப் 4 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஜுலை மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ க்ரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலியிடங்கள் தற்போது 4,662 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்பு கூடுதல் இடங்கள் காலிப்பணியிடங்கள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், அவையும் சேர்க்கப்பட்டு கூடுதல் பணியிடங்கள் நிரப்படும்” என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பணியிடங்கள் குறைவாக உள்ளதாக தேர்வர்கள் புகார் எழுப்பி வந்தனர். அரசு இயந்திரம் முறையாக இயங்கவும், கூடுதல் பணிச்சுமையை குறைக்கவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்த, தேர்தல் வாக்குறுதியின்படி காலிப்பணியிடங்களை திமுக அரசு நிரப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதோடு, பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

13 லட்சம் தேர்வர்கள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப் 4, க்ரூப் 2 மற்றும் க்ரூப் 1 தேர்வுகள் மூலம், தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 3,935 இடங்களை நிரப்ப நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 13 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில் தான், இந்த தேர்வு மூலமாக கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தேவை ஏற்பட்டால் கூடுதல் பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி க்ரூப் 2 தேர்வு

இதனிடையே, நாளை (செப்.28) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் க்ரூப்-2 பிரிவில் 50 பணியிடங்களும், க்ரூப்-2A பிரிவில் 595 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 905 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுத ஐந்தரை லட்சம் பேர், விண்ணப்பித்துள்ள நிலையில் காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வுக்கான விடைத் தாள்கள், வினாத் தாள்கள் அனைத்தும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுகூடங்களுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதோடு, உரிய மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.