Tamil Nadu Budget 2025: ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 - 26 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது 5 லட்சம் பேருக்கு புதிதாக வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்குடன். சொந்த வீடற்ற மற்றும் நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா வழங்குவதை அரசு தன் முன்னுரிமைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஏற்கனவே, சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் பட்டா வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் 32 கி.மீ பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான தடையை நீக்குவது தொடர்பாக, கடந்த பிப்.10-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, சென்னையில் மட்டும் ஆட்சேபமற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேரும், இதர மாவட்டங்களில் 57,084 பேர் என, 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பட்டா வழங்குவது தொடர்பாக நிலையான வழிகாட்டுதல்களுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், தளர்வு அளிக்கப்படுகிறது. இதர மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அதை அடுத்த 16 அல்லது 8 கி.மீ சுற்றளவுக்கு ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள் குடியிருப்போருக்கு பட்டா வழங்கலாம்.

அதிலும் குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட வரன்முறைப்படுத்துவதற்கான அரசாணைப்படி, சென்னை மற்றும் அதன் பெல்ட் பகுதி தவிர்த்த இதர மாநகராட்சிகளில் ஆக்கிரமிபபு நிலம் 15 சென்ட்க்கு அதிகம் இருந்தாலோ, இதர நகராட்சிகள், பேரூராட்சிகளில் 25 சென்ட்க்கு அதிகம் இருந்தாலோ, அந்த நிலம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு வழங்கப்படும்.

ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தை பொறுத்தவரை, வகைப்படுத்தப்பட்ட, வகைப்படுத்தப்படாத நிலங்கள், கள்ளான்குத்து, பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை, புஞ்சை மற்றும் இதர ஆட்சேபகரமற்ற, மாவட்ட தனிப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களாக இருக்க வேண்டும். இதுதவிர, பயன்படுத்தப்படாமலும், எதிர்காலத்தில் உரிய பயன்பாட்டுக்கு தேவைப்படாமலும் இருக்கும் வண்டிப்பாதை, களம், மயானம், தோப்பு உள்ளிட்ட உள்ளாட்சிகளில் உள்ள ஆட்சேபமுள்ள புறம்போக்கு நிலங்களும் இதில் அடங்கும்.

ரூ.3 லட்சத்துக்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் அல்லது ஒரு சென்ட் இவற்றில் எது குறைவாக இருந்தாலும் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக இருந்தால் நிலத்தின் மதிப்புக்கான தொகை பெறப்படுகிறது.

இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 2 சென்ட் வரையும், கிராமப்புறங்களில் 3 சென்ட் வரையும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் இருந்தால் நிலத்துக்கு உரிய தொகை பெறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு நிலம், குறிப்பிட்ட 2 சென்ட் அல்லது 3 சென்ட் அளவுக்கு அதிகமாக இருந்தால் அந்நிலம் அரசால் எடுத்துக் கொள்ளப்படும். இதற்காக, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாநில அளவில் தலைமைச்செயலர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ரூ.5 கோடி வரை மதிப்புள்ள நிலங்களுக்கான வரன்முறை பணியையும், மாநில அளவிலான குழு ரூ.5 கோடிக்கு அதிகமாக உள்ள நிலங்களையும் வரன்முறைப்படுத்தி வழங்குவதற்கான ஒப்புதல்களை வழங்கும். இந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.