சென்னையில் சுற்றுலா தளங்கள்

சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. எனவே எப்போது ஓய்வு நேரம் கிடைத்தாலும், மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. எனவே சென்னையில் படகு சவாரி செய்யும் வகையில் படகு குழாம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை நிறைவேற்றிடும் வகையில், ஏற்கனவே மாதவரம் மற்றும் மணலியில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், வட சென்னை மக்களுக்கு பெரிதும் உதவிடும் வகையில் திருவொற்றியூரில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்தடுத்து படகு குழாம்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவொற்றியூர் மண்டலம், வார்டு-3, அன்னை சிவகாமி நகரில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் படகுக் குழாமினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணலி மற்றும் மாதவரம் ஏரிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட படகுக் குழாம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதைப்போல தற்போது திருவெற்றியூர் மண்டலத்திலும், புதிய படகுக் குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூரில் படகு குழாம்

இதனை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரில் 20.17 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்ட ஏரியில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் படகுக் குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அழகிய நுழைவாயில்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நுழைவாயில், காத்திருப்பு அறை. உணவகங்கள்,

டிக்கெட் வழங்கும் பகுதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், முதலுதவி அறை. மீட்பு நடவடிக்கை வசதிகள். குடிநீர் வசதிகள். படகு சவாரிக்கான பல்வகை படகுகள், மின்விளக்கு வசதிகள், கம்பி அமைப்புடன் கூடிய சுற்றுச்சுவர். உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த படகு குழாமில் 8 இருக்கை விசைப் படகு. 4 இருக்கை மிதிப்படகு. 2 இருக்கை மிதிப்படகு. 1 வாட்டர் ஸ்கூட்டர், 1 இருக்கை கயாக், 2 இருக்கை கயாக், 3 அக்வா ஜோர்பிங், 2 அக்வா ரோலர் ஆகிய வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

படகு சவாரி கட்டணம் எவ்வளவு.?

8 இருக்கை கொண்ட படகிற்கான கட்டணம் 500 ரூபாய், வாட்டர் ஸ்கூட்டர் அதிவேகமாக செல்ல ஒருவருக்கு 800 ரூபாய், குரூப் படகு மற்றும் கால்மிதி போன்ற படகுகளில் சவாரி கட்டணமாக 200 மற்றும் 300 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பல இடங்களை சுற்றிப்பார்த்து போர் அடித்த மக்களுக்கு புதிய சுற்றுலா தளம் அமைந்திருப்பதால் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.