காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண்

சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 35 ) கார் ஓட்டுநர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவ செலவிற்காக கார் ஓட்டுவதில் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்திருந்துள்ளார். இவருக்கு சூரப்பட்டு அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுடன் கடந்தாண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பெண் கேட்டதை அடுத்து , தன் மருத்துவ செலவுக்காக சேர்த்து வைத்த 3.50 லட்சம் ரூபாயை விஜயகுமார் அவருக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் திருமண பேச்சு துவங்கிய போது அப்பெண் முட்டுக்கட்டை போட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே அதிர்ச்சியடைந்த விஜயகுமார் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அப்பெண் பணத்தை திருப்பி தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஜயகுமார் இது குறித்து கடந்த மாதம் அம்பத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் அப்பெண் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பணத்தை திருப்பி வழங்குவதாக அவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து ஜாமினில் விடுவித்தனர்.

மின்சார ரயில் மீது கற்கள் வீசிய கல்லுாரி மாணவர் கைது

அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று முன்தினம் காலை சென்ற மின்சார ரயிலில் மாநில கல்லுாரி மாணவர்கள் பயணம் செய்தனர். அந்த ரயில் அண்ணனுார் ரயில் நிலையத்திற்கு வந்த போது அங்கு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் மாநில கல்லுாரி மாணவர்கள் அமர்ந்திருந்த ரயில் பெட்டி மீது கற்களை வீசி உள்ளார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவர் ஈஸ்வரன் ( வயது 20 ) என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது வந்த தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவி நடத்தையில் சந்தேக பட்டு கத்தியால் குத்தி கொன்ற கணவர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை கரிமேடு அண்ணா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ் ( வயது 38 ) வெல்டிங் தொழிலாளி இவரது மனைவி ஷீலா ராணி ( வயது 25 ) இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரு மகன்கள் உள்ளனர். ஷீலாராணியின் நடத்தையில் சந்தேகப் பட்ட சரண்ராஜ் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். வழக்கம் போல மறுபடியும் சண்டை ஏற்படவே, ஷீலா ராணி கோபித்து கொண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள தன் சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார்.

காலையில் சரண்ராஜ் அவரை சமாதா செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்ட , இதனால் அடைந்த சரண்ராஜ் கத்தியால் ஷீலா ராணியின் கழுத்து, வயிறு , கைகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷீலா ராணி மயக்கமடைந்து மூச்சின்றி கிடந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சரண்ராஜ் போலீசாரின் விசாரணைக்கு பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் பலத்த காயங்களுடன் கிடந்த ஷீலா ராணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.