ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டு தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சாந்தி ஹோமம்:

இந்த நிலையில், கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி பிரசாதமான லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆய்வக பரிசோதனையிலும் அது உறுதி செய்யப்பட்ட நிலையில் தேவஸ்தான போர்டும் அதை ஒப்புக்கொண்டது. இது ஒட்டுமொத்த பக்தர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், புகழ்பெற்ற வைணவத் தலமான திருப்பதியின் புனிதத்தன்மையை மீட்டெடுப்பதற்காக சாந்தி ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று காலை 6 மணிக்கு திருப்பதியில் சாந்தி ஹோமம் தொடங்கியது. இந்த ஹோமம் வரும் 10 மணி வரை நடைபெறும்.