தென் கொரியாவைச் சேர்ந்த ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம்தான், தூத்துக்குடியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், தூத்துக்குடியில் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.10,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்

இந்தியாவில், கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்த, மாநில அரசுடன் இணைந்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக அளவில் மிகப்பெரும் கப்பல் கட்டுமான நிறுவனமாக இருந்து வரும் தென் கொரியாவைச் சேர்ந்த ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்திடம், மத்திய அரசு பேச்சுவாத்த்தை நடத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கப்பல் கட்டுமான தளங்களை அமைக்க இருப்பதாக தெரிகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் அவை அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில், கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்துடன் இணைந்து, மிகப்பெரிய கப்பல் கட்டுமானத் தளங்களை நிறுவ உள்ளது. இதற்காக, இந்தியாவில் பல இடங்களில் ஆய்வு நடத்தி, இடத்தை தேர்வு செய்து, இறுதி செய்திருப்பதாக தெரிகிறது.

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், மிகப் பெரிய அளவிலான கப்பல் கட்டுமான மற்றும் பழுது பார்க்கும் தளத்தை அமைக்க உள்ளது இந்நிறுவனங்கள். இதற்காக 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கப்பல் கட்டுமானத் துறையில் இந்தியாவின் இலக்கு என்ன.?

2030-ம் ஆண்டுக்குள், கப்பல் கட்டுமானத் துறையில், முதல் 10 நாடுகளுக்குள்ளும், 2047-ம் ஆண்டுக்குள், முதல் 5 நாடுகளுக்குள் இடம் பிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஏற்கனவே பட்ஜெட்டில், இந்தியாவில் கப்பல் தொடர்பான தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்பு வெளியானது. அதன் ஒரு பகுதியாகத்தான், ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் அதன் கப்பல் கட்டுமான தளத்தை அமைப்பதற்கு முன்வந்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்நிறுவனம் 10,000 கோடி முதலீடு செய்ய இருப்பது, அம்மாவட்டத்திற்கு மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பை கொடுக்கும்.

ஹெச்டி ஹூண்டாய் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனங்கள், இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடமும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமீபத்தில் நிதித்துறை அமைச்சகத்தின் செலவின நிதி கமிட்டி, கப்பல் கட்டுமான தளங்களை அமைப்பதற்கு 18,090 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவது குறித்து ஒரு கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.