என்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் கட்டாயப்படுத்தவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இடம்பெற அக்கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முதலில் தான் போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார். ஆனால் அடுத்த இரு தினங்களில் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். இது மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்குள்ளானது. இதனிடையே இதுதொடர்பாக திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஊடக நேர்காணல் ஒன்றில் பேசிய திருமாவளவன், சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்த மறுநாள் அப்போதைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். அப்போது அவரிடம் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொன்னேன். ஒரு தனியறையில் மு.க.ஸ்டாலினிடம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன். 40 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கும் உங்கள் முடிவுக்கு நான் என்ன சொல்ல முடியும் என அவர் கேட்டார்.

<iframe title="SP Velumani Joins DMK? | திமுகவில் SP வேலுமணி! தட்டித்தூக்கிய ஸ்டாலின்! ஆபரேஷன் கொங்கு மண்டலம்" src="https://www.youtube.com/embed/1tSffFUg4Eo" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

நான் ஏன் அவரிடம் இந்த கேள்வியை கேட்டேன் என்றால், கடலூர் மாவட்ட பொறுப்பாளராக இருந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என சொன்னதும் அதிருப்தியடைந்து விட்டார். ஏன் நீங்கள் இப்படி அறிவித்து விட்டீர்கள் என கேட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சராக இருந்த எ.வ.வேலுவும் என்னிடம் பேசினார். அதாவது நான் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தால் சிதம்பரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். அதேபோல் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தேர்தலும் இருக்கிறது. 2 தேர்தல்களிலும் நாங்கள் பணியாற்ற வேண்டும். அதைவிட எம்.பி. இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் எதனால் ராஜினாமா செய்தீர்கள் என்று எந்த காரணத்தை எங்களால் சொல்ல முடியும் என கேட்டார்கள். இது ஒன்று தான் எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என திமுக தரப்பில் கூறினார்கள்.

அப்போது எ.வ.வேலு என்னிடம் ஒரு யோசனை சொன்னார். அதாவது இன்னும் 3 ஆண்டுகள் உங்களுக்கு எம்.பி. பதவி இருக்கிறது. அதனால் சட்டமன்ற தேர்தலில் விசிகவில் இருந்து ஒருவருக்கு வாய்ப்புக் கொடுங்கள். நீங்கள் 2029 வரை எம்.பி. பதவியில் இருந்து விட்டு, அதன்பின் ஏதாவது ஒரு எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய சொல்லி இடைத்தேர்தலை சந்தியுங்கள். அப்படியாக தமிழ்நாடு அரசியலுக்கு வாருங்கள். இப்போது வேண்டாம் என கூறினார். இப்போதைக்கு உங்கள் குடும்பத்தில் ஒருவரை வேட்பாளராக அறிவியுங்கள். கட்சிக்காரர் என்றால் எம்.எல்.ஏ.வாகி விட்டால் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நான் மறுநாள் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், நீங்கள் 8 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதனால் உங்கள் முடிவை மறுபரீசிலனை செய்யுங்கள் என சொன்னார்.

Also Read: தினம் தினம் திமுக அழுகை.. உதயநிதி என்ன சுதந்திர போராட்ட தியாகியா? - கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்!

அதற்கு நான் நீங்கள் தான் கூட்டணியின் தலைவர். எனவே உங்கள் மனது அதிருப்தியடையக்கூடிய வகையில் நான் நிலைப்பாட்டை எடுக்க மாட்டேன். வேண்டாம் என்றால் ஓகே. என் முடிவை கைவிடுகிறேன் என கூறிவிட்டேன். மு.க.ஸ்டாலினோ, யாரோ என்னை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்தவில்லை. நான் யாருடன் இருந்தாலும் அவர்களுடன் இணங்கி போக வேண்டும் என நினைப்பேன் அவ்வளவு தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.