திமுக தலைமையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் காரணம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், திமுக – விசிக இடையே 8 தொகுதிகளுக்கு தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகி உள்ளது. இரட்டை இலக்கங்களை விசிக வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது 8 இடங்களில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இரட்டை இலக்க இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நேற்று நடந்த விசிக கூட்டத்தில் இரட்டை இலக்க இடங்கள், ஒரு மாநிலங்களவை இடத்தைக் கேட்டுப் பெற தீர்மானம் நிறைவேற்றினோம். முதல்வர் ஸ்டாலினிடமும் இதையே வலியுறுத்தினோம்.

எனினும் கூட்டணியின் நலனுக்காக 8 தொகுதிகளில் போட்டியிடும் இந்த முடிவை ஏற்கிறோம். விசிகவின் நலனைப் போலவே கூட்டணியின் நலமும் முக்கியம். வலதுசாரிகள் வலுப்பெற இடம் கொடுக்கக்கூடாது. திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

18 தொகுதிகளை கொடுத்த திமுக

இடதுசாரி அரசியலை பாதுக்காக்க போராடக் கூடிய இயக்கங்களுக்கு திமுக, 18 தொகுதிகளை அளித்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் தொகுதி குறைவாகத் தோன்றும். ஆனால் வெற்றி இலக்கை நோக்கியே உடன்பாடு ஏற்படுள்ளது. தொகுதி உடன்பாட்டில் மனநிறைவு ஏற்பட்டுள்ளது.

கூட்டணி உடன்பாடு ஏற்பட தாமதமானதால் புதுச்சேரியில் 3 இடங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளோம்’’.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.