தேர்தலுக்கு முன்பு வரை ஆதவ் அர்ஜூனாவுடன் தான் பேசவில்லை எனவும், தவெக அமைச்சரவையில் இணைந்ததை மு.க.ஸ்டாலினிடம் சொல்லவில்லை எனவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. இதனை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் ஆதவ் அர்ஜூனா - திருமாவளவன் இடையே பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த சூழலில் விசிக திமுக கூட்டணியை முறித்து தவெக அமைச்சரவையில் இணைந்ததை திமுக எம்.பி., ஆ.ராசா காட்டமாகவும், சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியும் விமர்சித்தார். இது விசிக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

இந்த சூழலில் பேஸ்புக் நேரலையில் திருமாவளவன் தோன்றி பல விஷயங்களைப் பற்றி பேசினார். அவர் பேசுகையில், “சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா தெரிவித்த சர்ச்சை கருத்துகள் அடிப்படையில் அவர் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆதவ் அர்ஜூனாவிடம் பல நூறு கோடி பணம் வாங்கியதால் தான் திருமாவளவன் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக சொன்ன கும்பல் வாயடைத்து போனது. அவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டது. அந்த கும்பலின் அவதூறு பொய்த்து போன நிலையில் ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணையவுள்ளதாக சொல்லி விட்டு தான் சென்றார். நானும் வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.

அதன்பிறகு ஆதவ் அர்ஜூனாவுக்கு, விசிகவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. அதன்பிறகு கரூர் சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது. இதுதொடர்பாக ஆதவை நான் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னேன். இது ஒரு விபத்து தான் என கூறினேன். விஜயிடமும் என் வருத்தத்தை சொல்லுங்கள் என தெரிவித்தேன். அதற்கு பிறகு தேர்தல் முடிவு வரும் வரை நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

ஊரில் இருப்பவர்கள் பல அவதூறுகளை பரப்புகிறார்கள். நாம் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதை திமுகவின் ஆ.ராசா விமர்சித்திருந்தார். நான் அதை பெரிதாக்க வேண்டாம் என என்னிடம் கேட்ட விசிக தொண்டர்களிடம் சொன்னேன். அவர் காங்கிரஸை அப்படி விமர்சித்தாரா என தெரியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்ததும் அணி மாற்றம் தான். நாமும் அப்படித்தான் முடிவெடுத்தோம். ஆனால் தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டிய முடிவை பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தியதால் எடுத்தோம்.

ஆதரவு கொடுக்கும் முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று சந்தித்து சொன்னேன். அதேசமயம் அமைச்சரவையில் இடம்பெற போவதை நான் தெரிவிக்க முடியவில்லை. ஒரு சில முன்னாள் அமைச்சர்களை தொடர்புகொண்டு சொன்னேன். திமுக கூட்டணியில் 10 ஆண்டுகளாக மேலாக தொடர்ந்தோம். அந்த கூட்டணியை பாதுகாக்க எவ்வளவு மெனக்கெட்டோம் என்பதை மு.க.ஸ்டாலின் நன்கறிவார்.

ஆனால் ஆ.ராசா உள்ளிட்டோர் அதனை விமர்சிப்பது மிகுந்த வலியாக இருக்கிறது. தவெகவுடன் விசிக இணைந்திருப்பதை திமுக தொண்டர்களால் எப்படி அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியும்?.. திமுக தொண்டர்கள் விசிகவை விமர்சனம் செய்வது மனித இயல்புதான். ஆ.ராசாவை எதிர்த்தோ, திமுகவை எதிர்த்தோ நாம் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை. யாரும் போராட்டம் செய்ய வேண்டிய தேவை இல்லை” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.