தஞ்சாவூர்: மாஸ் கண்ணா மாஸ்... நான் அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும் மாஸ்தான் என்று கம்பீரமாக பழமை மாறாமல் மாலை நேரத்தில் மக்களை தன்னை நோக்கி தேடி வர வைத்துள்ளது ராஜப்பா பூங்கா.

தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகில் மிகவும் பழமையான, 138 ஆண்டுகள் கடந்தும் கனகச்சிதமாக கம்பீரமாக நிற்கும் மணிக்கூண்டு அமைந்துள்ள ராஜப்பா பூங்காதான் மாலை நேரத்தில் மக்களுக்கு பொழுது போக்க மாஸான ஒரு இடமாக மாறியுள்ளது.

தஞ்சை நகரின் மைய பகுதியில் அண்ணா சிலை அருகே அமைந்துள்ளது ராஜப்பா பூங்கா உள்ளது. மராட்டிய கட்டிட கலை மற்றும் ஆங்கிலேயர் கட்டிட கலை இணைந்து கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மணிகூண்டின் உச்சியில் உள்ள கடிகாரம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒலி எழுப்பும். மேலும் கீழிருந்து கோபுரத்துக்குள் செல்ல படிக்கட்டுகள் அழகாக அமைந்துள்ளன. இதன் மூலம் கோபுரம் உச்சிக்கு சென்று தஞ்சை நகரின் அழகை ரசிக்க முடியும்.

இப்படி பெருமையான கட்டிட அமைப்பு கொண்ட ராஜப்பா பூங்காவும், மணிக்கூண்டும் பொலிவு இழந்த நிலையில் தஞ்சை மக்களின் மாலைநேர பொழுது போக்கு பூங்காவாக இதை பழமை மாறாமல் புதுப்பித்து மாஸ் காட்டியுள்ளது தஞ்சை மாநகராட்சி நிர்வாகம். ஆமாங்க... இந்த ராஜப்பா பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெற்றுள்ளது. கண்கவர் விளக்குகள், ஹாயாக அமர்ந்து ரிலாக்சாக குடும்ப கதை, ஆபீஸ் கதை பேச மர இருக்கைகள், சுற்றிலும் உள்ள மரங்களில் இருந்து வீசும் ஜில்லென்ற தென்றல் காற்கு என்று மாலைநேரத்து சுகத்தை மனம் முழுவதும் நிரப்பி ரிலாக்ஸ் ஆக மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ராஜப்பா பூங்கா தக, தகவென்று மாற்றி உள்ளனர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனும், மாநகராட்சி நிர்வாகத்தினரும்..

இந்த பூங்காவில் மணிக்கூண்டு உள்ளது. இதனை ராணிஸ் டவர் என்றும் சொல்வாங்க. ஏன் தெரியுங்களா? மணிக்கூண்டு ராசா மிராசுதார் மருத்துவமனையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கூண்டு 1883-ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மகாராணி முடி சூட்டியதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது என்றும், மணிக்கூண்டை கட்ட தஞ்சாவூர் நகராட்சிக்கு மராட்டிய ராணி நிதி கொடுத்ததால் ராணிஸ் டவர் என்று அழைக்கப்படுவதாகவும் காற்று வழி செய்திகள் கச்சிதமாக உலா வருகிறது. இந்த பூங்கா 3,284 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது. இதில் மணிக்கூண்டு 185 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த மணிக்கூண்டு 130 அடி உயரம் கொண்டது. கட்டிடம் முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. செங்கலின் மேல் சிமெண்டு பூச்சு இல்லாமல் மிகுந்த கலை நயத்துடன் காட்சி அளிக்கிறது. அப்படி ஒரு அட்டகாசமான கலையால்தான் இத்தனை ஆண்டுகள் ஆன போதும் கம்பீரமாக சிங்கம் போல் நிற்கிறது இந்த மணிக்கூண்டு.

இந்த மணிக்கூண்டை பழமை மாறாமல் புதுப்பித்து புதுப்பொலிவு பெற செய்துள்ளனர். இந்த பூங்கா தஞ்சை பகுதி மக்களுக்கு மட்டுமின்றி பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளி மாவட்ட, மாநில மக்கள் இளைப்பாறவும் வெகுவாக பயன்பட்டு வருகிறது. மாலை நேரத்தில் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நடைப்பயணம் செய்யவும் இங்கு வசதி உள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு மையமும் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களின் விருப்ப இடமாக உள்ளது. இதனால் மாலை வேளையில் இந்த மாநகராட்சி ராஜப்பா பூங்கா கலகலவென்று குழந்தைகளின் சிரிப்பொலியுடன் குடும்பம், குடும்பமாக வந்து இளைப்பாறும் பகுதியாக மாறி உள்ளது. இதற்காக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் என அனைவருக்கும் மக்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.