பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து அதியன் ஆதிரை இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் தண்டகாரண்யம். அட்டகத்தி தினேஷ் , கலையரசன் , வினு சாம் , ரித்விகா , ஷபீர் , சரண்யா ரவி , அருள்தாஸ் , கவிதா பாரதி , பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜஸ்தின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

தண்டகாரண்யம் திரைப்பட விமர்சனம்

கிருஷ்ணகிரி மலைககாடுகளில் வசிக்கும் நாயகன் முருகன் (கலையரசன்) கான்டிராக்ட் பணியாளாக வன அதிகாரியாக உள்ளார். எப்படியாவது இந்த வேலை நிரந்தரமாகிவிட்டால் தான் காதலிக்கும் பெண் பிரியாவை (வினு சாம்) திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவருடைய லட்சியமாக இருக்கிறது. முருகனின் அண்ணனான சடையன் (அட்டகத்தி தினேஷ்) அந்த கிராமத்து மக்களின் பிரச்சனைகளுக்காக அதிகாரிகளை எதிர்த்து பேசும் ஒரே நபராக இருந்து வருகிறார். இதனால் உள்ளூர் வனச்சரக அதிகாரிகள் மற்றும் அந்த நிலத்தை கைபற்ற நினைக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளின் பகை அவரை சூழ்கிறது. சடையனை பழிவாங்க அவனது தம்பி முருகனுக்கு பணி நிரந்தரம் கிடைப்பதை தடுக்கிறார் வன அதிகாரி. இதனால் தனது நிலத்தை விற்று தனது முருகனை ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் பயிற்சி அகாடமியில் சேர்க்கிறார் தினேஷ்.

அரசியல் ஆதாரத்திற்காக முருகனைப் போல் பயிற்சிக்கு வந்த பலரை நக்ஸலைட் என ஓத்துகொள்ள வைத்து அவர்களை வைத்து பல திட்டங்களை தீட்டுகிறது அந்த மாநில அரசு. பல கொடுமைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு எப்படியாவது போலீஸாகிட வேண்டும் என்கிற கணவை தொடர்கிறான் முருகன். போலீஸாகி தனது ஊருக்கு முருகன் திரும்பிச் சென்றானா என்பதே தண்டகாரண்யம் படத்தின் கதை

நக்ஸ்ல் போராளிகளை நடத்தப்படும் பல அரசு நடவடிக்கைகளுக்குப் பின்னுள்ள மறைமுக அரசியலையும் அதில் ஒரு சாமானியன் வந்து மாட்டிக் கொள்வதை மிக உணர்வுப்பூர்வமான தருணங்களாலும் தேர்ந்த எழுத்தாலும் சொல்கிற தண்டகாரண்யம். ஆனால் அரசியல் , காதல் , அண்ணன் தம்பி பாசம் என பல்வேறு விஷயங்களுக்கு இடையில் தத்தளிக்கிறது திரைக்கதை. கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை எலிவேஷன்களையும் இந்த படத்தில் வைத்திருக்க வாய்ப்பு இருந்தும் இயக்குநர் முழுக்க முழுக்க கதையை உணர்வுப்பூர்வமான எழுத்தால் மட்டுமே வழிநடத்தியிருக்கிறார். அதனால் படத்தைப் பார்க்க கொஞ்சம் பொறுமை தேவை.

நக்ஸலைட்களை அரசு சித்தரிக்கும் விதத்தின் போக்கிலேயே கதை சொல்லப்படுகிறதே தவிர அந்த நக்ஸலைட்களின் கொள்கை , நோக்கம் போன்ற எந்த விஷயமும் அவர்களின் பார்வையில் இருந்து சொல்லப்படவில்லை. அட்டகத்தி தினேஷின் கதாபாத்திரம் இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம். விடுதலை , டாணாக்காரன் ஆகிய படங்களில் ஏற்கனவே காவல்துறை பயிற்சி முகாம்களில் நடக்கும் கொடுமைகள் காட்டப்பட்டதால் தண்டகாரண்யம் பெரியளவில் சுவாரஸ்யமாக தெரிவதில்லை. அது படத்தின் தவறும் இல்லை. ஆனால் காதல் , அண்ணன் தம்பி செண்டிமெண்ட் , நக்ஸலைட்கள் என கதைச்சரடுகள் கோர்வையாக நேர்கோட்டில் இணையாமல் தனித்தனி காட்சிகளாக நின்றுவிடுகின்றன.

கலையரசன் , வினு சாம் , ஷபீர் , பால சரவணன் , அட்டகத்தி தினேஷ் , ரித்விகா சிறப்பாக நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகரனின் இசை ஒரு சில இடங்களில் இரைச்சலாக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளுக்கு அழுத்தம் சேர்க்கிறது. இயற்கை காட்சிகளிலும் சரி காட்சிகளை ஓளியூட்டியிருக்கும் விதத்திலும் ஒளிப்பதிவாளர் ஶ்ரீ கிரிஷ் கவனமீர்க்கிறார்.