முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த பண்டிகைகளில் ஒன்று தைப்பூசம். தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாளை உலகெங்கும் வாழும் தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

தைப்பூசம்:

தை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் பிப்ரவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?

பக்தர்கள் மனம் உருகி வேண்டிக்கொண்டு முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பது வழக்கம். தைப்பூசத்திற்கு பலரும் மாலையிட்டு 48 நாட்கள், 21 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். சிலர் தைப்பூச நாளில் மட்டும் விரதம் இருப்பார்கள்.

தைப்பூச நாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் காலையிலே எழுந்து குளிக்க வேண்டும். பின்னர், காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். காலையிலே முருகனின் பாடல்களையும், கந்தர் சஷ்டி போன்ற வாசகங்களையும் பாராயணம் செய்து முருகரை வழிபடலாம்.

பால், பழம் மட்டும் சாப்பிட்டும் விரதம் மேற்கொள்ளலாம். சிலர் இரண்டு வேளை விரதம் இருந்து மாலையில் விரதத்தை நிறைவு செய்வார்கள். விரதத்தை நிறைவு செய்யும்போது முருகனை மனமுருக வேண்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். விரதம் மேற்கொள்பவர்கள் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்ய வேண்டும்.

கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே சாமி தரிசனம் செய்யலாம்.உடல்நலக்குறைவு கொண்டவர்கள் விரதம் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

கொடியேற்றம்:

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமான் கோயில்களில் நேற்று கொடியேற்றம் நடந்தது. தைப்பூசத்தை கோலாகலமாக கொண்டாடும் பழனியில் நேற்று கொடியேற்றம் நடந்தது. பழனியில் தைப்பூசம் என்றால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.

பழனி உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் தினசரி குவிந்து வருகின்றனர். காவடி எடுத்தும், மாலை அணிந்தும் பக்தர்கள் தைப்பூச நாளில் வருவது வழக்கம். பழனி, திருச்செந்தூர் போன்ற பல முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வது வழக்கம்.

குவியும் பக்தர்கள்:

பக்தர்கள் வழக்கத்தை விட பன்மடங்கு குவிவார்கள் என்பதால், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி மலேசியா, ஜெர்மன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் பக்தர்கள் தைப்பூச திருவிழாவிற்கு தயாராகி வருகின்றனர். பல கோயில்களில் பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, சர்ப்பகாவடி என்று பல வடிவங்களில் தங்களில் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். பல இடங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு அன்னதானங்கள் நடைபெற உள்ளது. சென்னையில் புகழ்பெற்ற வடபழனி முருகன் கோயிலிலும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.