பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். பெங்களூருவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதாப் சின்ஹா, பி.ஒய். விஜயேந்திரா, அமித் மாளவியா, மத்திய அமைச்சர் வி. சோமன்னா ஆகியோர் திருமணத்திற்கு வந்து புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

யார் இந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்?

பாஜகவின் இளைஞரணி தலைவரும் பெங்களூரு தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, தமிழகத்தை சேர்ந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். பரதநாட்டிய நடனக் கலைஞரான ஸ்கந்தபிரசாத், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உயிரி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

ஆனால், கலை மீதான ஆர்வம் காரணமாக அதையே தன்னுடைய தொழிலாக தேர்வு செய்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டிய கலையில் பட்டம் பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1.13 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். யூடியூப்பில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தைப் பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில், சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், தேஜஸ்வி சூர்யா ஆகியோரின் திருமணம் பெங்களூருவில் இன்று நடைபெற்றுள்ளது. திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணத்தில் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் மஞ்சள் நிற காஞ்சிபுரம் பட்டுச் சேலையுடன் தங்க நகைகளை அணிந்திருந்தார். தேஜஸ்வி சூர்யா, வெள்ளை மற்றும் தங்க நிற உடையில் காணப்பட்டார். மற்றொரு புகைப்படத்தில், சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் சிவப்பு-மெரூன் நிற சேலையிலும், தேஜஸ்வி சூர்யா வெள்ளை நிற உடையிலும் காணப்பட்டார்.

இவர்களின் திருமணத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சோமன்னா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்றனர்.