Tamil 3rd Language: நாட்டின் மூன்றாவது பொதுமொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி, இந்தி திணிப்பு போரட்டத்திற்கு மத்தியில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பு விவகாரம்:

புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு விவகாரம், தமிழ்நாட்டில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. திட்டத்தை அமல்படுத்த முடியாவிட்டால் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்க முடியாது என மத்திய அரசு கூறி வருகிறது. தமிழ்நாடு அரசோ நிதியை நிறுத்தினாலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என கூறி வருகிறது. புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக காட்டமாக பேசி வருகிறது. இந்நிலையில் தான் தமிழ் மொழியை மூன்றாவது பொது மொழியாக அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் பறந்துள்ளது.

நாடு முழுவதும் பறந்த கடிதம்:

அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், “தமிழகத்தில் மோடியின் ஆட்சியை விமர்சிப்பவர்களில் பலரால் மும்மொழிக் கொள்கை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்றாம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது அடிப்படையில் இந்தி அல்ல, ஆனால் அது இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். 500 பக்கங்கள் கொண்ட NEP ஆவணத்தில், ஓரிரு பக்கங்களில் உள்ள மொழிக் கொள்கையை குறிப்பிட்டு, தமிழக திமுக அரசு NEPயை நிராகரித்துவிட்டது. இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி. மூன்றாம் மொழி ஹிந்தியாக இருக்கக் கூடாது என்று மாநில அரசுக்குத் திரும்பத் திரும்பப் பதிலளித்தும்கூட, அவர்கள் தங்கள் தவறான நிலைப்பாட்டை திருத்திக் கொள்ளத் தயாராக இல்லை.

மூன்றாவது பொதுமொழி ”தமிழ்”?

இந்தக் கட்டமைப்பின் அடிப்படையில், தமிழ், அதன் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துடன், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் கலாச்சார ரீதியாக வளமான இந்தியாவை நோக்கி நாம் பயணிக்கும்போது, உங்கள் மாநிலப் பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழை மூன்றாம் மொழியாக சேர்க்கக் கருத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, 2,000 ஆண்டுகால இடைவிடாத இலக்கிய பாரம்பரியம் கொண்ட உலகின் பழமையான மொழிகளுள் ஒன்றான பொக்கிஷம். இது இந்தியாவின் செம்மொழி மற்றும் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்குறள் உட்பட தத்துவம், இலக்கியம், அறிவியல் மற்றும் நெறிமுறைகளில் தமிழின் பங்களிப்பு, உலகம் முழுவதும் உள்ள கற்பவர்களுக்கு மதிப்புமிக்கது.

மாணவர்களுக்கான பலன்கள்:

விருப்பமான மூன்றாம் மொழியாகத் தமிழைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் மாநில மாணவர்கள்..

இந்தியாவின் வளமான இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஒன்றோடு இணைவார்கள்

அறிவியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் அவர்களின் மொழியியல் மற்றும் அறிவாற்றல் திறன்கள் மேம்படும்

இந்தியாவின் தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றுவதால் பொருளாதார மற்றும் வணிக வாய்ப்புகள் கிடைக்கும்

இந்தக் கொள்கையானது கட்டாயப்படுத்துவதைக் குறிக்கவில்லை, ஆனால் வரலாற்று, கலாச்சார மற்றும் இலக்கிய முக்கியத்துவம் கொண்ட மொழியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பாகும்.

அனைத்து மாநிலங்களுக்கும் கோரிக்கை:

இந்த மும்மொழிக் கொள்கையைப் பற்றி விமர்சகர்கள் தவறாகப் பிரச்சாரம் செய்யும் போது, இது இந்தித் திணிப்பு பற்றிப் பிரச்சாரம் இல்லை என்பதை நிரூபிப்பது நமது கடமை என்று நான் உறுதியாக உணர்கிறேன். அதேசமயம் நமது தொன்மையான தமிழ் மொழியைக் கொண்டாடுவதற்கும் இது உறுதுணையாக உள்ளது. தயவுசெய்து இதைப் பரிசீலித்து, உங்கள் மாநிலப் பள்ளிகளில் விருப்பமான மூன்றாம் மொழியாகத் தமிழைச் சேர்க்க முடியுமா என்பதை ஆராயுங்கள்” என இராம ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார்.