'கங்குவா' படத்தின் தோல்வி சூர்யாவை அசைத்து பார்த்தாலும், இதை தொடர்ந்து மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆன 'ரெட்ரோ' கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையிலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் நடிகர் சூர்யா வின்டேஜ் லுக்கில் நடித்திருந்தார். அதே போல், பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஒரு வாரத்தில் 'ரெட்ரோ' திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இதனால் இந்த படத்தை 2டி நிறுவனம் மூலம் தயாரித்த சூர்யா - ஜோதிகா நல்ல லாபத்தை பெற்றுள்ளனர். இந்த நிலையில், ரெட்ரோ திரைப்படம், பெற்றுள்ள லாபத்தில் இருந்து ரூ.10 கோடி பணத்தை சூர்யா அகரம் அறக்கட்டளை மாணவர்களுக்காக அள்ளிக்கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது... "அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்..

பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது.

‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக பொதுமக்களுக்கும், அன்பான தம்பி தங்கைகளுக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை, அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாற்றவே அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அற உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கிற பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமெனில், பங்களிப்பும் உயர வேண்டும். அதன் முதல் படியாக, ரெட்ரோ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாக கிடைத்த அன்பு தொகையில், பத்து கோடி ரூபாய்-ஐ இந்த கல்வியாண்டில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு, பகிர்ந்தளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

விரைவில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், உயர்கல்வி கனவோடு படிக்கிற மாணவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற கல்வி உதவியை சுற்றி இருப்பவர்களுக்கு வழங்குவோம். கல்வியே ஆயுதம்.. கல்வியே கேடயம். அன்புடன், சூர்யா." என்று கூறியுள்ளார்.