தொடங்கியது கோடை விடுமுறை

விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லவும், உறவினர்கள் வீட்டிற்கு பயணிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து ரயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டதால் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் அறிவிப்பு

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடைக்கால பயணிகளின் அதிகப்படியான நெரிசலை சமாளிக்க சிறப்பு “ஒன் வே” ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் நாகர்கோவில் – சென்னை எக்மோர் இடையே (Train No. 06071) ஒன் வே எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 21, 2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 4.00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றடையும். இது ஒரே ஒரு சேவையாக மட்டுமே இயக்கப்படும்.

நாகர்கோவில்- சென்னை சிறப்பு ரயில்

இதேபோல், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே (Train No. 06072) ஒன் வே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 22, 2026 (புதன்கிழமை) மதியம் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் வகையில் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் AC இரண்டாம் நிலை, AC மூன்றாம் நிலை, ஸ்லீப்பர் மற்றும் பொதுப்பிரிவு பெட்டிகள் உட்பட மொத்தம் பல்வேறு வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கான சிறப்பு பெட்டிகளும் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

முன்பதிவு எப்போது.?

இந்த ரயிலானது நாகர்கோவில், திருவனந்தபுரம்,கொல்லம், திருவல்லா,கோட்டயம், போதனூர், திருப்பூர், சேலம், காட்பாடி வழியாக சென்னை எழும்பூருக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கு முன்பதிவு ஏப்ரல் 21, 2026 அன்று தொடங்கியுள்ளது. நாகர்கோவில் – சென்னை எக்மோர் ரயிலுக்கு காலை 8.00 மணி முதல், சென்னை – நாகர்கோவில் ரயிலுக்கு மதியம் 2.15 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.