தானும் அந்நாட்டு ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரும் நிதியுதவியை எதிர்பார்த்து பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இது உலக நாடுகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் நாட்டின் முன்னணி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதாரம் காரணமாக தனது தலைமையிலான அரசு எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

சுயமரியாதைக்கு மிகப்பெரிய சுமை

அதில், பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு நிலை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதில் நமது நட்பு நாடுகள் கொடுத்துள்ள கடன்களும் அடங்கும். ஆனால் அத்தகைய கடனை வாங்கச் செல்பவர் தலை குனிந்திருப்பது உங்களுக்குத் தெரியாது. கடன் கேட்க செல்லும்போது தானும் அசிம் முனீரும் எவ்வளவு சங்கடமான முறையில் பல்வேறு விஷயங்களை சமரசம் செய்ய வேண்டியிருக்கிறது.

ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரும், நானும் உலகம் முழுவதும் சென்று பணத்திற்காக பிச்சை எடுக்கும்போது நாங்கள் வெட்கப்படுகிறோம். கடன் வாங்குவது எங்கள் சுயமரியாதைக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. அந்த நேரத்தில் எங்கள் தலைகள் வெட்கத்தால் குனிகின்றன. கடன் கொடுப்பவர்களால் அவர்கள் செய்ய விரும்பும் பல விஷயங்களை நாங்கள் வேண்டாம் என்று சொல்ல முடியாத சூழல் உண்டாகிறது.

வறுமையை குறைக்க திட்டம்

ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கொண்டு வர பல கடுமையான கொள்கை முடிவுகளை எடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இந்த பேச்சு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் அரசு அதன் தற்போதைய கடன் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், தனி காலநிலை தொடர்பான நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 1.2 பில்லியன் டாலரை பெற்றது . இந்த நிதி பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவும், அதன் வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிக்கவும் உதவியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானின் மத்திய வங்கி, டிசம்பர் மாதத்திற்குள் அதன் வெளிநாட்டு கையிருப்பு 20 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று கணித்திருந்தது. இது ஒரு சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டமானது பாகிஸ்தான் இறுக்கமான பணவியல் கொள்கையைப் பராமரிக்கவும் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் தலைமையிலான குழு தெரிவிக்கையில், இந்த நிதியால் நாங்கள் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். இனி வேலை வாய்ப்பை உருவாக்கி வறுமையை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.