விஜயின் தி கோட் படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக தி கோட் இருந்தது. இனி தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை ரஜினியின் வேட்டையன் , சூர்யாவின் கங்குவா ஆகிய இரு படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே போல் மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்கள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதம் அடுத்து ரசிகர்கள் திரையரங்கில் பார்க்க வேண்டிய படங்களைப் பார்க்கலாம்

தேவாரா

டோலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவாரா'. இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர். கொரட்டாலா சிவா இயக்கத்தில் யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜான்வி கபூர் மட்டுமல்ல பாலிவுட் நடிகர் சைப் அலி கானும் இப்படத்தின் மூலம் டோலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கு சினிமாவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏ.ஆர்.எம்

மலையாளத்தில் ஜிதின் லால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஏ.ஆர்.எம். மூன்று வரலாற்று காலத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் டொவினோ தாமஸ் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். க்ரித்தி ஷெட்டி , ஐஸ்வர்யா லக்‌ஷ்மி , சுரபி ராஜேஷ் , பாசில் ஜோசப் , ஹரிஷ் உத்தமன் , ரோகிணி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மெகாலொபோலிஸ்

உலகப் புகழ்பெற்ற படம் காட்ஃபாதர் படத்தின் இயக்குநர் பிரான்சிஸ் ஃபோர்ட் கொப்பொல்லா இயக்கியுள்ள படம் மெகாலொபொலிஸ். ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மெய்யழகன்

தமிழில் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி , ஸ்ரீதிவ்யா , ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தும்பாட்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான இந்தி மொழிப்படம் தும்பாட். ராஹி அனில் பார்வே இப்படத்தை இயக்கியிருந்தார். ஹாரர் திரைப்படாம உருவான இப்படம் ஓடிடியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. வரும் செப்டமர் 13 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.