செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு

தமிழக முதலமைச்சரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் முக்கிய தளபதிகளில் ஒருவராக செந்தில் பாலாஜி உள்ளார். கொங்கு மண்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். உள்ளாட்சி மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்கு செந்தில் பாலாஜியின் உழைப்பும் ஒரு காரணம் என திமுக தலைமை நம்பி வருகிறது. அந்த வகையில் தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பான மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தின் போது போக்குவரத்து துறையில் பணி வழங்குவதற்கு பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி திடீரென கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி கைது

இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவால் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் வாரமிருமுறை திங்கட்கிழமை மற்றும் வெளிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து கடந்த 17 மாதங்களாக வாரம் இருமுறை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் இந்த நிபந்தனையை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமினில் தளர்வு

அப்போது செந்தில் பாலாஜியின் நிபந்தனையை தளர்த்த அமலாக்கத்துறை கடும் எதிப்பு தெரிவித்தது. கடந்த 1.5 ஆண்டுகளாக வாரந்தோறும் இருமுறை செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி வருகிறார். இனியும் ஆஜராக வேண்டுமா? என்று கேட்ட உச்சநீதிமன்றம், தேவைப்படும்போது மட்டும் ஆஜரானால் போதுமானது என்று உத்தரவிட்டு, வாரமிருமுறை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் செந்தில் பாலாஜிக்கு ஜாமினில் தளர்வு கிடைத்துள்ளது.