Chennai To Chengalpattu RRTS TRAIN: " சென்னையில் இருந்து செங்கல்பட்டிற்கு RRTS ரயில் போக்குவரத்து விரைவில் கொண்டு வரப்பட உள்ளது"

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்கள் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன. அதாவது ஒரு நகரம் அல்லது மாநிலம் முன்னேற்றம் அடைய வேண்டும், பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்றால், போக்குவரத்து வசதிகள் என்பது மிக முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு

தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி. விரிவான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு தலைநகர், புது டெல்லி - மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, இது தொடர்பாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது, நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் இந்த விரைவு போக்குவரத்து அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்கள் ?

சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் , சென்னை - காஞ்சிபுரம் - வேலூர், கோயம்புத்தூர் - சேலம் ஆகிய மூன்று இடங்களில் இந்த போக்குவரத்து முறையை அமைப்பதற்காக தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் மூலம் இந்த ரயில் கட்டமைப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை - செங்கல்பட்டு

சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்திற்கு விரைவு மண்டல போக்குவரத்து ( RRTS TRAIN) ரயில் பாதைகளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திண்டிவனம் சுமார் 167 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.

தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி படையெடுக்கின்றன. தினமும் திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து சென்னைக்கு பல்வேறு வேலை விஷயமாக வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்க வருகிறது. ஆனால் அவர்கள் சாலை மார்க்கமாகவோ, அல்லது ரயில் வழியாக வந்தால் பல மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே அவர்களுடைய பயண நேரத்தை குறைக்கும் வகையில் இந்த ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன ?

RRTS என சொல்லக்கூடிய அந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. சென்னையில் தாம்பரத்திலிருந்து செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 15 நிமிடத்தில் வந்து சேர முடியும். அதேபோன்று தாம்பரத்திலிருந்து திண்டிவனத்திற்கு ஒரு மணி நேரம் 15 நிமிடத்தில் திண்டிவனத்தை அடைய முடியும். இந்த ரயில் திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தால் தமிழ்நாட்டில் போக்குவரத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என நம்பப்படுகிறது.

திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ?

சாத்தியக்கூறு தயாரிப்பது குறித்த சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. 6 மாதங்களில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். வழித்தடம், நிறுத்தங்கள் அமைவிடம், தேவையான நிலம் மற்றும் செலவு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். இதன் பிறகு திட்ட அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் பரிசீலனை செய்யப்படும். இதனைத் தொடர்ந்து இந்த திட்ட அறிக்கை தமிழக அரசிடம், திட்டம் ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு திட்டம் ஒப்புதல் அளித்த பிறகு, முழுமையான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.