உடல் நலக்குறைவு காரணமாக நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய 46 வயதில் உயிரிழந்தார். மஞ்சள் காமாலை காரணமாக சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடந்தார்.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினருக்கு சினிமா மற்றும் அரசியல் என பல்வேறு தரப்பினரைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை வரை அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

மரணம் என்பது மதுவின் அடிப்படையில்தான்?

இந்த நிலையில், நடிகர் இளவரசு ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ’’பொதுவாக சினிமாவில் மரணம் என்பது மதுவின் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் முழு உண்மையில்லை.

ரோபோ சங்கர் ஆரம்ப காலத்தில் ரோபோ உள்ளிட்ட பல்வேறு வேடங்களை இட்டு நடிக்கும்போது ஸ்டீல் பெயிண்டை உடல் முழுவதும் நிறைய பூசிக்கொண்டு நடிப்பார். ஒவ்வொரு ஷோவிலும் அப்படித்தான் நடிப்பார். ஒவ்வொரு ஷோவுக்கும் 300 ரூபாய் கொடுப்பார்கள்.

தோலில் இருந்த எனாமல் நீக்கம்

வீட்டுக்குத் திரும்பி வந்ததும் கெரசின் எனப்படும் மண்ணெண்ணெயைப் போட்டுத்தான் அதை நீக்க முடியும். இவ்வாறு செய்து கொண்டே இருந்ததில், ரோபோ சங்கருக்கு தோலில் இருந்த எனாமல் முழுவதும் போய்விட்டது.

ஏற்கெனவே இளமைக் காலத்தில், அவருக்கு மஞ்சள் காமாலை வந்திருந்தது. அதற்குப் பிறகு வயது ஏற ஏற அவர் உடலை முறையாகப் பராமரிக்கவில்லை. இன்னும் அவர் கவனமாக இருந்திருக்க வேண்டும். 46 வயது என்பது இறப்பதற்கான வயதில்லை. அவரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்’’ என்று நடிகர் இளவரசு தெரிவித்துள்ளார்.

கோவா செல்லும்போதே மெலிந்து காணப்பட்டார்

அதேபோல மூத்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ரோபோ சங்கருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘’ரோபோ சங்கர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். ஆனால் நாங்கள் கோவா செல்லும்போதே மெலிந்து காணப்பட்டார். இறந்த பிறகு அதுதான் காரணம், இதுதான் காரணம் என குறை சொல்வதில் ஒன்றுமில்லை’’ என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.