சினிமாவில் டப்பிங் கலைஞர், நடிகையாக அறியப்படும் ரவீனா ரவி , தன்னை சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்ததாக 2 பேர் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக அடையாளம் தெரியாத நபர்கள் பிரபலங்களையும், சக மனிதர்களையும் ஆபாசமாக பேசுவது, அறுவறுப்பான கமெண்டுகளை பதிவிடுவது என தனிநபர் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதில் பல துறைச் சார்ந்த பிரபலங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆபாச கமெண்ட், டீஏஜிங் செய்யப்பட்ட போட்டோ என பல வகைகளில் மன ரீதியாக பிரபலங்களை சிலர் துன்பப்படுத்தி வருகின்றனர்.

இப்படியான நிலையில் சினிமாவில் டப்பிங் கலைஞராக வலம் வந்த ரவீனா ரவி, லவ் டுடே படத்தின் மூலம் பிரபல நடிகையாகவும் அறியப்பட்டார். தொடர்ச்சியாக சினிமாவில் டப்பிங், நடிப்பு என இருதுறைகளிலும் அவர் வலம் வருகிறார். ரவீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “பொதுமக்கள் கவனத்திற்கு, இதனை அலட்சியப்படுத்த வேண்டாம்.மூன்று ஆண்டுகளாக எங்களைத் துன்புறுத்தி வரும் ஒரு ஃபாலோயரிடம் இருந்து என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் என்னைப் பாதுகாப்பதற்காக இதை நான் பதிவிடுகிறேன்.
காவல் துறை புகார்களும் எச்சரிக்கைகளும் இதை நிறுத்திவிடும் என்ற நம்பிக்கையில் நான் அமைதியாக இருந்தேன். எனினும் துரதிர்ஷ்டவசமாக, சபரீஷ் என்ற நபரும் அவரது இரட்டை சகோதரரும் என்னையும், என் குடும்பத்தினரையும், என் நண்பர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர்.

அவர்கள் செய்திகளிலும் கருத்துகளிலும் அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். என்னை மட்டுமல்லாமல், எனக்கு நெருக்கமானவர்களையும் குறிவைக்கிறார்கள். என்னால் இந்தச் சிக்கலைச் சந்திக்க நேர்ந்த என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நான் மனமார்ந்த மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.நாங்கள் சட்டப்பூர்வமான வழிகளை முயற்சி செய்தோம். ஆனால் இரட்டை சகோதரர்களின் துன்புறுத்தல் நிற்கவில்லை.

அவர் பல கணக்குகளிலிருந்து செயல்பட்டு, என்னையும், மற்ற பல பெண் நடிகைகள் மற்றும் கலைஞர்களையும் பின்தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். "ஏற்கனவே சந்தித்தது", "திருமணம் நிச்சயிக்கப்பட்டது" போன்ற கற்பனைக் கதைகளை உருவாக்குகிறார்.

இதை இப்போது பொதுவெளியில் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் அவரது ஃப்ரோபைலை தடுத்து, புகார் அளியுங்கள். அவரிடமிருந்தோ அல்லது அவரது சகோதரரிடமிருந்தோ ஏதேனும் செய்திகள் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களின் கருத்துகள் அல்லது செய்திகளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சென்னை இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்று அடிக்கடி அழைக்கப்படுகிறது. இந்த நகரம் அனைவருக்கும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க, இதுபோன்ற விஷமிகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் உண்மையாக நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். ரவீனாவுக்கு ஆதரவாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற நிகழ்வுகளால் தினம் தினம் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். இவற்றையெல்லாம் தடுக்க நிச்சயம் எதிர்காலத்தில் நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.