தான் நடித்த படையப்பா படத்தின் மூலக்கதை எங்கிருந்து உருவானது என்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரீ-ரிலீசாகும் படையப்பா படம்

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் டிசம்பர் 12ம் தேதி அவர் நடித்த படையப்பா படம் மீண்டும் ரீ-ரிலீசாகிறது. இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், லட்சுமி, அப்பாஸ், ப்ரீதா விஜயகுமார், செந்தில், ரமேஷ் கண்ணா என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் சுப்பர் ஹிட் ஆனது.

மனம் திறந்த ரஜினி

இந்த நிலையில் படையப்பா படம் ரீ-ரிலீசாவதால் ரஜினிகாந்த் மனம் திறந்து நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில், “1999ல் படையப்பா படம் வெளியானது. நான் 1975ம் ஆண்டு சினிமாவுக்கு நடிக்க வந்தேன். என்னுடைய 25ம் ஆண்டில் அந்த படம் வெளியானது. நான் 21ம் ஆண்டில் இருக்கும்போதே 25ம் ஆண்டில் படம் நடிக்கும்போது சொந்தமாக தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். படையப்பா படத்தின் மூலக்கதை நான் தான் உருவாக்கினேன். கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதில் வரும் நந்தியின் கேரக்டர் ரொம்ப பிடித்திருந்தது. அதனை மையமாக கொண்டு ஒரு முழு படம் பண்ண வேண்டும் என்பது 2, 3 ஆண்டுகளாக என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அப்படி உருவானது தான் படையப்பா.

அந்த கதையை நான் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. நான் திரைக்கதை பண்ணுகிறேன் என சொன்னார். அதன்படி திரைக்கதை மற்றும் வசனம் அருமையாக பண்ணினார். டைட்டில் என்ன வைக்கலாம் என யோசித்தபோது எனக்கே தெரியாமல் சட்டென வாயில் இருந்து படையப்பா என்ற வார்த்தை வந்தது. என்னுடைய நிறைய படங்களுக்கு அப்படித்தான் திடீரென தோன்றும் வார்த்தைகளை டைட்டிலாக சொல்லுவேன்.

உதாரணமாக அண்ணாமலை, பாட்ஷா, வீரா, முத்து ஆகிய படங்களை சொல்லலாம். படையப்பா டைட்டிலை கேட்டுவிட்டு கேள்விப்படாத ஒன்றாக உள்ளதே என கே.எஸ்.ரவிகுமார் சொன்னார். ஆனால் பழைய டைட்டிலாக இருக்கிறதே என கூறினார். படை, சொரி என பேசுவார்களே என கே.எஸ்.ரவிகுமார் யோசித்தார். அதெல்லாம் பற்றி கவலைப்பட வேண்டாம் என நான் சொன்னேன்.

இதற்கிடையில் நான் தயானந்த சரஸ்வதியை அடிக்கடி சந்தித்து ஆன்மிக விஷயங்களைப் பற்றி பேசுவேன். அப்படியாக ஒருமுறை பேசும்போது அடுத்த படம் பற்றி சொன்னேன். படையப்பா படத்தின் கதையை கேட்டு விட்டு கதை நல்லாருக்கே, அந்த பெயர் முருகனுடையது. ஆறுபடையப்பன் என வைத்து வேல் கொண்டு டைட்டில் எல்லாம் பண்ணினோம்” என கூறியுள்ளார்.