Rajasthan BJP Minister: மக்களவை தேர்தலின் போது விடுத்த சவாலில் தோற்றதால், கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாஜக அமைச்சர் ராஜினாமா..!

ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்து பாஜக தலைவர் கிரோடி லால் மீனா ராஜினாமா செய்துள்ளதாக அவரது உதவியாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், "கிரோடி மீனா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை 10 நாட்களுக்கு முன்பு முதல்வரிடம் கொடுத்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது, தனது பொறுப்பில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் பாஜக தோல்வியுற்றாலும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கிரோடி லால் மீனா பேசியிருந்தார். ஆனால், அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது.

இதனால் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே அவர் தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார். இந்நிலையில் 72 வயதான கிரோடி லால் மீனா தான் வகித்து வந்த மாநில வேளாண்மை, ஊரக வளர்ச்சி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதார். ஆனால், அவரது ராஜினாமா இன்னும் ராஜ்ஸ்தான் முதலமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.