2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கு ₹2.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2027-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 16ஆவது நிதிக்குழு அறிக்கையையும் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், ரயில்வே அமைச்சகத்திற்கு ₹2.81 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பு, திறன் விரிவாக்கம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவதைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சகத்திற்கு ₹2.81 லட்சம் கோடியை அரசாங்கம் இன்று ஒதுக்கியது.

பட்ஜெட் ஆவணங்களின்படி, முந்தைய நிதியாண்டு 26க்கான பட்ஜெட்டில், ரயில்வேக்கு மொத்தம் ₹2.55 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இதில் மூலதனச் செலவினங்களுக்கு ₹2.52 லட்சம் கோடியும், வருவாய் ஆதரவு மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ₹0.03 லட்சம் கோடியும் அடங்கும்.

2027 நிதியாண்டில், ரயில்வேக்கான ஒதுக்கீடு ₹2.81 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சி மற்றும் தளவாட செயல்திறனுக்கான முக்கிய உந்துதலாக ரயில் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதில் அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

சரக்கு போக்குவரத்துக்கு பிரத்யேக ரயில் பாதை

சரக்கு போக்குவரத்துக்கு பிரத்யேக ரயில் பாதை அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதை அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை

நாடு முழுவதும் மொத்தம் ஏழு வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு - ஹைதராபாத்துக்கு அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

* மும்பை முதல் புனே வரை

* புனே முதல் ஹைதராபாத் வரை

* ஹைதராபாத் முதல் பெங்களூரு வரை

* ஹைதராபாத் முதல் சென்னை வரை

* சென்னை முதல் பெங்களூரு வரை

* பெங்களூரு முதல் வாரணாசி வரை

* வாரணாசி முதல் சிலிகுரி வரை

உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து

உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தை 6இல் இருந்து 12 சதவீதமாக 2047க்குள் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.