Rafale M Jets: ஃப்ரான்ஸிடமிருந்து 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

ரஃபேல் M போர் விமானங்கள் கொள்முதல்:

பஹால்காமில் அரங்கேறிய தீவிரவாதிகள் தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தான், ஃப்ரான்ஸிடமிருந்து 63 ஆயிரம் கோடி மதிப்பிலான 26 ரஃபேல் எம் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை இந்தியா அடுத்தவாரம் இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃப்ரான்சின் பாதுகாப்பு அமைச்சரின் இந்திய வருகை சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும், இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான ரஃபேல் விமானங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஆன்லைன் வாயிலாகவே கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி திங்கட்கிழமை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஃப்ரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டீன் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.

26 ரஃபேல் M போர் விமானங்கள்:

ஒப்பந்தம் கையெழுத்தானதும் மூன்றாரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். ஆறரை ஆண்டு காலத்திற்குள் 26 ரஃபேல் எம் போர் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அவற்றில் 22 விமானங்கள் ஒற்றை நபர் பயணிக்கக் கூடியது. அவற்றை விமான தாங்கி கப்பல்களில் வைத்து கூட பயன்படுத்த முடியும். மற்ற நான்கு விமானங்களும் இரட்டை இருக்கைகளை கொண்டிருக்கும். அவற்றை விமான தாங்கி கப்பல்களில் வைத்து பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது. இந்திய விமானப்படையில் ஏற்கனவே, 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய ரஃபேல் எம் விமானங்கள் இந்திய கடற்படையில் இணைவது மூலம், நாட்டின் வான் மற்று நீர்பரப்பின் பாதுகாப்பு புதிய உச்சத்தை அடைய உள்ளது.

ரஃபேல் M போர் விமானங்கள் சிறப்பம்சங்கள்:

ரஃபேல்-எம் என்பது டசால்ட் ரஃபேல் போர் விமானத்தின் கடற்படை எடிஷனாகும். இது விமானம் தாங்கிக் கப்பல்களில் செயல்படுவதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரட்டை இன்ஜின், டெல்டா-இறக்கை வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் சூப்பர்சோனிக் வேகத்தில் (மாக் 1.8) பறக்கும் திறன் கொண்டத. கடற்படை சேவைக்காக இதில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களில் வலுவூட்டப்பட்ட தரையிறங்கும் கியர் மற்றும் கேரியர் தரையிறங்கும் இடங்களுக்கான அரெஸ்டர் ஊக்குகள், மேம்படுத்தப்பட்ட ரேடார் மற்றும் மின்னணு போர் அமைப்புகள் ஆகியவை அடங்கும். இது 4.5-வது தலைமுறை போர் விமானமாகும்.

ஆயுத பலம்:

50 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த விமானத்தில் MICA மற்றும் Meteor ஏவுகணைகள் மற்றும் SCALP க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகையான வானிலிருந்து வான் மற்றும் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் இணைக்கப்பட்டுள்ளது. ரஃபேல்-எம் ஒரு RBE2-AA மின்னணு ஸ்கேனிங் ரேடார் மற்றும் முன்னணித் துறை ஆப்ட்ரானிக்ஸ் (FSO) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.

விமானம் தாங்கி கப்பல்கள்:

இந்தியாவிடம் தற்போது இரண்டு விமானம் தாங்கி கப்பல்கல் உள்ளன. அதன்படி, ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. மற்றொன்றான ஐஎன்எஸ் விக்ராந்த் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இவற்றில் இருந்து போர் விமானங்கள் வானில் பறக்க SKI-JUMP தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விமானங்களை நிறுத்தி வைக்க பிடிப்பிற்கான ஊக்குகளை கொண்ட அரெஸ்டர் கேபிள்கள் இந்த கப்பல்களில் பயன்படுத்தப்படுகின்றன. மிக்-29K விமானங்களை கையாளவே இந்த கப்பல்களில் குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே அவற்றில் ரஃபேல் எம் போர் விமானங்களை நிலைநிறுத்தி பயன்படுத்த சிறிய மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.