உலகப் புகழ்பெற்ற QS Ranking பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் தொடர்ந்து 14ஆம் ஆண்டாக, மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts Institute of Technology - MIT) உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல இந்திய அளவில் QS Ranking பட்டியலில் ஐஐடி டெல்லி முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமாக மிளிரும் ஐஐடி டெல்லி

இந்த பட்டியலில், கடந்த காலங்களைக் காட்டிலும் முன்னேறி ஐஐடி டெல்லி 123ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. 2025ஆம் ஆண்டு 150ஆம் இடத்திலும் 2024ஆம் ஆண்டில் 197ஆம் இடத்திலும் ஐஐடி டெல்லி இருந்த நிலையில், முன்னேற்றம் கண்டுள்ளது.

அதே நேரத்தில் ஐஐடி மும்பை, கடந்த ஆண்டைக் காட்டிலும் சரிந்து 2ஆம் இடத்தைத் தக்க வைத்துள்ளது. குறிப்பாக 2025ஆம் ஆண்டு 118ஆம் இடத்தில் இருந்த ஐஐடி மும்பை, 2026ஆம் ஆண்டில் 129-ஆம் இடத்தில் உள்ளது.

அதிசயிக்க வைத்த ஐஐடி சென்னை

ஐஐடி சென்னை அதிசயத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. 2025ஆம் ஆண்டு 227ஆம் இடத்தில் இருந்த ஐஐடி சென்னை, 47 இடங்கள் முன்னேறி 2026ஆம் ஆண்டில் 180-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில் இந்த ஆண்டு, இந்தியாவில் 54 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன, இதன்மூலம் இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் நான்காவது அதிக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நாடாக உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக 8 இந்திய நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளன. இது உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் கல்வி நிலையை பிரதிபலிக்கிறது.

வேறு எந்தெந்த கல்வி நிறுவனங்கள்?

மற்ற முதன்மையான இந்திய நிறுவனங்களில் ஐஐடி கரக்பூர் (215), ஐஐஎஸ்சி பெங்களூரு (219) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் (328) ஆகியவை அடங்கும். பிட்ஸ் பிலானி (668) மற்றும் ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் (851-900) போன்ற தனியார் நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.

முழு விவரங்களை https://www.topuniversities.com/world-university-rankings என்ற இணைப்பில் காணலாம்.