இந்தியா முழுவதும் கடந்த 5ம் தேதி வெளியாகிய திரைப்படம் புஷ்பா இரண்டாம் பாகம். கடந்த 2022ம் ஆண்டு வெளியான புஷ்பா படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு இருந்தது.

புஷ்பா அல்லு அர்ஜூன்:

இந்த சூழலில், கடந்த 5ம் தேதி வெளியான புஷ்பா படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தியிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. புஷ்பா படம் ஒரு செம்மரக் கடத்தல் பின்னணியில் சாதாரண ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனின் வித்தியாசமான நடிப்பால் புஷ்பா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

புஷ்பா படத்தில் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் ஒரு சாமானியனாக நடிப்பில் வித்தியாசம் காட்டியிருப்பார். குறிப்பாக தோள்பட்டையை தூக்கியவாறு அவர் வித்தியாசமான மேனரிசம் காட்டியிருப்பார். புஷ்பா படம் வெற்றி பெற இது முக்கியமான காரணமாகவும் அமைந்தது. இந்த நிலையில், புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் காட்டிய உடல் மொழி ஏற்கனவே மற்றொரு நடிகர் காட்டிய உடல்மொழி என்பது தெரியவந்துள்ளது.

ஒரிஜினல் புஷ்பராஜ் இவர்தான்:

தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோவாக திகழ்ந்தவர் ஸ்ரீஹரி. இவரது நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு ப்ருத்வி நாராயணா. இதில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். போலீஸ் கதாபாத்திரத்தில் கம்பீரம் காட்டி நடித்த ஸ்ரீஹரி, அவரது தம்பி கதாபாத்திரத்திலும் அவரே நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீஹரி தனது தோள்பட்டையை ஒரு புறம் தூக்கிக் கொண்டும், எதையும் அலட்சியமாக கையாளும் வித்தியாசமான உடல் மொழியை காட்டியிருப்பார். படம் முழுக்க அதே உடல்மொழியில் வந்து கலக்கியிருப்பார். குடும்ப சென்டிமென்டாக இந்த படம் உருவாகியிருக்கும்.

ப்ருத்வி நாராயணா காட்டிய உடல்மொழியையே அப்படியே புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் காட்டியுள்ளார். தற்போது ப்ருத்வி நாராயணா படத்தில் ஸ்ரீஹரியின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்தான் உண்மையான புஷ்பா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ப்ருத்வி நாராயணா படத்தை தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கியிருப்பார்.

வசூல் வேட்டை:

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ஸ்ரீஹரி விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் காவல்துறை அதிகாரியாகவும், ராம்சரணின் மாவீரன் படத்தில் ஷேர்கானாகவும் நடித்திருப்பார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ள புஷ்பா 2ம் பாகம் திரைப்படம் தற்போது வரை 900 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.