பிருத்விராஜ்

தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்கம் , தயாரிப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவிருக்கும் லுசிஃபர் 2 திரைப்படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

மும்பையில் புது வீடு

பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா இருவரும் மும்பையில் பாந்த்ராவில் வசித்து வருகிறார்கள். இந்த வீடு ரூ 17 கோடி மதிப்புள்ளது. இதுதவிர்த்து தற்போது அதே பகுதியில் பிருத்விராஜ் ப்ரோடக்‌ஷன்ஸ் பெயரில் இரண்டடுக்கு மாடி வீடு ஒன்றை அவர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாலமான பார்க்கிங் வசதிகளுடன் கூடிய இந்த வீட்டின் மொத்த மதிப்பு 30.6 கோடி என்றும் இந்த வீட்டின் பத்திர பதிவு மட்டும் ஸ்டாம்ப் ட்யூட்டிக்கு 1.84 கோடி அவர் பணம் செலுத்தியுள்ளதாக ஸ்கொயர் யார்ட்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் வசித்து வரும் பகுதியாகும். இந்த இடத்தில் இருந்து முதன்மையான படப்பிடிப்பு ஸ்டுடியோவுக்கு செல்வது எளிது என்பதால் பிரபலங்கள் இந்த பகுதியில் சொந்தமாக வீடு வாங்குவதை விரும்புகிறார்கள். தமிழ், இந்தி , மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிருத்விராஜ் மும்பையில் தனக்கு இரண்டாவது வீட்டை சொந்தமாக்கியுள்ளார்.