பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ சீர்மரபினர்‌ மாணவ/ மாணவியருக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கலாம்‌ என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ அழைப்பு விடுத்துள்ளார்,

அரசு, அரசு உதவி பெறும்‌ கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனியார்‌ தொழிற்கல்லூரிகளில்‌ அரசு ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ பயிலும்‌ பிற்படுத்தப்பட்ட (பி.வ) மிகப் பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும்‌ சீர்மரபினர்‌(சீ.ம) மாணவ/ மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம்‌ கீழ்க்கண்ட நிபந்தனைகளின்‌ அடிப்படையில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ (ம) சிறுபான்மையினர்‌ நலத்துறை மூலம்‌ வருடந்தோறும்‌ செயல்படுத்தப்பட்‌டு வருகின்றன.

வருமான வரி நிபந்தனை இன்றி கல்வி உதவித்தொகை

அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்‌ பிவ/ மிபிவ/ சீம மாணவ/ மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக்‌, தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ பயிலும்‌ மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம்‌ ரூ.2,50,000,/-க்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

2024- 2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள்‌ University Management Information system (UMIS) http://umis.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ வரவேற்க செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. கல்வி உதவித்தொகைக்கு மாணாக்கர்கள்‌ உடனடியாக விண்ணப்பிக்கலாம்‌. கல்வி உதவித்தொகை விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கக் கடைசி நாள்‌ 28.02.2025 ஆகும்‌

புதுப்பித்தல்‌ மாணவர்‌கள்

ஏற்கனவே, கல்லூரியில்‌ கல்வி உதவித்தொகை பெற்று 2024-25 ஆம்‌ ஆண்டில்‌ 2, 3(ம)4 ஆம்‌ ஆண்டு பயின்று வரும்‌ புதுப்பித்தல்‌ மாணாக்கர்கள்‌, கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்ப வேண்டிய அவசியமில்லை.

அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில்‌ நடப்பாண்டில்‌ கல்வி பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள்‌ மூலம்‌ உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்‌.

புதிய மாணவர்கள்

நடப்பு கல்வியாண்டில்‌ (2024-2025) புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில்‌ முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில்‌ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள்‌, தற்போது தாங்கள்‌ பயிலும்‌ கல்லூரியில்‌ கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி http://umis.tn.gov.in என்ற இணையத்தளத்தின்‌ மூலம்‌ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்‌. முதல்‌ தலைமுறை பட்டதாரி எனில்‌ அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்‌.

மேற்படி, விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து BC, MBC & DNC வகுப்பைச்‌ சார்ந்த மாணாக்கர்களை, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள்‌ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.

கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலரை, அலுவலக நேரங்களில்‌ அணுகி தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: http://umis.tn.gov.in