தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு தவெக தலைவர் விஜயுடன் பேசவில்லை என ஆந்திர துணை முதலமைச்சரான பவன் கல்யாண் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என்ற நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இணைந்துள்ளது. இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் 19 கட்சிகள் இணைந்திருக்கிறது. இதனால் திமுகவை வீழ்த்த தமிழக வெற்றிக் கழகத்தை தங்கள் பக்கம் இழுக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக டெல்லி மேலிடம் தீவிரம் காட்டியதாக தகவல் வெளியானது.

அதிக இடங்கள், எதிர்க்கட்சி தலைவர் அல்லது துணை முதலமைச்சர் பதவி தருகிறோம் என சொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தங்கள் தலைமையில் கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பாக தெரிகிறது. இதனிடையே தவெக தலைவர் விஜயிடன், திரைத்துறையில் அவரது நெருங்கிய நண்பரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பவன் கல்யாணிடம், “கடந்த ஒரு வாரமாக ஒரு செய்தி உலா வருகிறது. நீங்கள் விஜயை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய சொல்லி அட்வைஸ் செய்தீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அப்படியெல்லாம் இல்ல. நான் பேசவில்லை. நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டேன். எதற்கு இப்படி பரப்பினார்கள் என்பது தெரியவில்லை. நான் விஜயை சந்தித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. சமீபத்தில் நான் விஜயிடம் பேச வில்லை. எங்களுக்குள் எந்தவித தொடர்பும் இல்லை” என தெரிவித்தார்.

தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தான் விஜய்க்கு சரியான இடமா? என்ற கேள்விக்கு, “எனக்கு தெரியவில்லை. கூட்டணி என்பது கட்சி தலைவர்களை மட்டும் கொண்டது கிடையாது. அது அவர்களின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவால் அமைவது. அது தனிப்பட்ட விஷயம் கிடையாது” என கூறினார்.

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தனித்து போட்டியிடுவது சிறந்ததா அல்லது கூட்டணி சேரலாமா என்ற கேள்விக்கு, “அது அவர்கள் எப்படி இருக்க விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று நினைக்கிறேன். உதாரணமாக என்னுடைய சகோதரர் சீரஞ்சிவியை எடுத்துக் கொள்ளலாம். பிரஜா ராஜ்யம் கட்சியை அவர் தொடங்கியபோது தனித்து தான் நின்றார். கூட்டணி அமைக்க ஏராளமனா வாய்ப்பு இருந்தும் தனியாக தான் களம் கண்டார். 18 இடங்களில் வென்றார். குறிப்பிட்டத்தக்க வாக்கு சதவிகிதத்தை பெற்றார்.

ஆனால் நான் கட்சி தொடங்கியபோது அடுத்த 2 மாதங்களில் தேர்தல் வந்தது. அதில் நாங்கள் போட்டியிடவில்லை. அதேசமயம் கூட்டணியில் இருந்தோம். எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்னுடைய தரப்பில் எந்தவித விஷயமும் விஜயுடன் விவாதிக்கப்படவில்லை” என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.